Wednesday, July 9, 2008

வானம்-4 யார்க்-1

மேலே வானம்...கீழே நியூ யார்க்...

வானம்-4 யார்க்-1

Joe Ann. இந்தப் பெண்மணி என்னுடன் பணிபுரியும் ஒரு அமெரிக்க மூதாட்டி. இவர் அலுவலக நிர்வாகப் பொறுப்புக்களைக் கவனித்துக் கொள்கின்றார்.

இவர் ஒரு சுவாரசியமானவர். என்னைக் கண்டால் கேலியும் கிண்டலும் உற்சாகமாய் தொற்றிக்கொள்ளும். செல்லமாக அடிப்பார். இன்னும் அன்பு அதிகமானால் என் தாடையைப் பிடித்து, 'My dear Sweet Boy…. You resemble my son…' என வசனங்கள் நீளும். நான் கூச்சத்தினால் நெளிவேன்.

'ஒரு நாள் என் மகனை உன்னிடம் அறிமுகப்படுத்துகின்றேன். அவனும் உன்போல்தான். நீ என் பேரக் குழந்தைகளை அவ்வப்பொழுது நினைவுபடுத்துகின்றாய்......'

அவர் என்னை இப்படித் தன் பேரக்குழந்தைகளுடன் ஒப்பிடுவது எனக்கு மிகவும் வருதத்தையே கொடுக்கும். ஏனெனில் அக்குழந்தைகள் இரண்டாம் வகுப்பும் ஒன்றாம் வகுப்பும் பயிலும் சின்னஞ்சிறார்கள். எனக்கு அறிவு வளர்ச்சி குறைவு என்பதினை இப்படி சொல்கின்றாரா...? அல்லது என் உருவம் கண்டு அப்படி சொல்கின்றாரா...? அல்லது நான் கெரகமே என 'ஙே' என விழிப்பதைக் கண்டு சொல்கின்றாரா...? எனப் புரியாமல் நான் குழம்புவதைக் கண்டு அவர் மகிழ்வார்.

அவர் அடிக்கடி, 'என்ன ஒரு கஷ்டமான வேலை...! தலைவலிக்கின்றது....' எனத் தன் வேலையினை சலித்துக்கொள்வார். ஆனாலும் கடமையினைச் சரியாக முடித்துவிடுவார். நான்சி என்ற பெண்மணி. இரு குழந்தைகளுக்குத் தாயான இவர், ஜோ ஆனுடன் சேர்ந்து கொண்டு என்னைக் கலாய்ப்பதில் ஒரு சந்தோஷம். நான்சியின் மூத்த புதல்வன் ஸ்டோனிப்ரூக் யுனிவர்சிடியில் ஒரு சிறந்த கால்பந்தாட்டவீரன்.

நான் அவ்வப்பொழுது அலுவலகத்திற்கு வெளியே யாரும் வராத ஒரு இடத்திற்குச் சென்று சில மணித்துளிகள் மட்டுமே விரைவாகக் கண்களை
மூடி தவமியற்றுவது வழக்கம். மின்கலம் மீண்டும் மின்சக்தி தேக்கப்பட்ட ஒரு நிறைவு.

அங்கே புகைபிடிப்பவர்களும் இடையிடையே வந்து புண்பட்ட மனதினை புகைவிட்டு ஆற்றிச் செல்வர். சொல்லிவைத்தது போல் அனைவருமே பெண்கள்.

நான் நான்சியிடம் கூட வினவியிருக்கின்றேன், 'புகை பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானதே... நீங்கள் இப்படி புகைபிடிப்பதை உங்கள் அம்மா, அப்பா திட்டியதில்லையா....?'

அவர்கள் நான் ஏதோ சொல்லக்கூடாததை சொல்லியது போல் இடி இடியெனச் சிரித்தனர்.

'அவர்கள் பரலோகத்திலிருந்து வந்தா திட்டுவார்கள்...? சரிதான்... நீ ஒரு மாங்கா மடையன்...'

ஒருமுறை நான்சியும் அவரது கணவரும், ஜோ ஆன்னும் அவரது கணவரும் ஒரு நண்பரின் பிறந்த நாள் விழாவிற்கு அந்த மிகப்பெரிய ஹோட்டலுக்குக் கொண்டாட எங்களுடன் வந்திருந்தனர். அங்கு நிகழ்ந்த அந்த சந்திப்பிலும் விழாவினிலும் அனைவரும் (என்னைத் தவிர...!) மது எடுத்துக் கொள்வதும் விதவிதமான விலங்கின உணவுகளை எடுத்துக்கொள்வதும் இங்கே வழக்கம். அப்பொழுது ஜோ ஆன்னின் கணவரைச் சந்தித்திருக்கின்றேன்.

நம் மும்பை பட உலகில் பப்பு வர்மா என்றொரு சண்டைப் பயிற்சி நிபுணர் நினைவிருக்கின்றதா...? அந்த பப்பு இவரின் மினியேச்சரோ என எண்ணத் தோன்றியது. பப்புவினைவிட அதிக உயரம்; அதிக உடல் எடை; முறுக்கேறிய உடல். மாதமொருமுறை இரண்டு மூன்று நாட்கள் கடலில் மிதக்கும் குடியிருப்பில் சொகுசான வாழ்வு; மீன் பிடி படகுகள் என சற்றே வசதியாக அவர்களது வாழ்க்கை பயணித்துக் கொண்டிருந்தது.

ஒரு முறை உற்சாகமான ஒரு வார இறுதியின் வெள்ளிக்கிழமையின் காலைப் பொழுதினில் காலைச் சிற்றுண்டியாக Dunkin Donutsலிருந்து வரவழைக்கப்பட்ட உணவுகளை அனைவரும் கொரித்துக்கொண்டிருந்த வேளையில் ஜோ ஆன் தன் புதல்வனையும் தன் பேரக்குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். என்னிடம் அறிமுகப்படுத்தினார்.

அவரது புதல்வரின் உருவ அமைப்பும் என்னுடைய உருவ அமைப்பும் துளிக்கூட தொடர்பில்லை. நானோ ஆசியக் கண்டத்தினைச் சார்ந்த 200 % தென்கோடி தமிழ்நாட்டினைச் சார்ந்த ஒரு கிராமவாசி. அவரது புதல்வனோ மிகவும் உயரமாய் அமானுஷ்ய உருவம் கொண்ட ஒரு அமெரிக்கன்.

'ஆஹா.... அவர் உருவத்தினை ஒப்பிட்டு கேலி செய்கின்றாரோ....?' என பின்னர்தான் என் மரமண்டைக்குப் புரிய வந்தது. அவரது பேரக்குழந்தைகள் மட்டும் என்னுடன் நட்புக்கரம் நீட்டிவிளையாடினர். எல்லா குழந்தைகளுமே ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்டவராகவே இருக்கின்றனர். இந்தக் குழந்தைகளும் நம் குழந்தைகள் போன்றே சாக்லெட்டிற்கு ஆசைப்படுகின்றனர்...! (எலேய்.... குழந்தைன்னா சாக்லேட் பிடிக்கும்னு தெரியாதா...?ன்னு நீங்கள் என்னை அடிக்க வருவதற்குள் நான் தப்பியோடிவிடவேண்டும். ஆண்டவா என்னைக் காப்பாத்து...!)

அண்மைக் காலங்களில் ஜோ ஆன் சற்றே கலங்கியவராகக் காணப்பட்டார். அவரது கேலியும் கிண்டலும் இப்பொழுது விடைபெற்றிருந்தது. மெளனமாகத் தன் கடமையிலேயே குறியாக இருந்தார்.

அவ்வப்பொழுது அலுவலகத்திற்கு, பாடசாலை செல்லும் சிறுவர்கள் மட்டம் போடுவது போன்று காணாமல் போக ஆரம்பித்திருந்தார். அவரது முகத்திலும் உரையாடல்களிலும் ஒரு மென்சோகம்; எதையோ இழக்கப்போகும் ஒரு அமானுஷ்ய பயம். என் மூளையின் நியூரான்களில் ஒரு அபாய மணி ஒலித்துக்கொண்டிருந்தது.

ஒரு நாள் நான் யாருமில்லா ஒரு தனிமையான தருணத்தில் கேட்டுவிட்டேன்.

'உங்களின் அந்த உற்சாகம் என்னவாயிற்று...? இப்பொழுதெல்லாம் நீங்கள் ஏன் என்னைக் கேலியும் கிண்டலும் செய்வதில்லை....?'

ஆழ்ந்த மெளனமாக இருந்தார். எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். 'இவனிடம் சொல்லி என்ன பயன்...? ' என்ற ஒரு எண்ணவோட்டம் அவரது மனதினில் ஓடிக்கொண்டிருந்த்தை என்னால் வெகு எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆழ்ந்த பெருமூச்சிற்குப் பின்னர் தன் சோகத்தினைக் கொட்டினார்.

அவரது கணவருக்கு அண்மைக் காலங்களில் உடல்நிலை சரியில்லாமல் போனதாயும் பரிசோதனைகளின் முடிவு புற்றுநோய் எனக் காட்டுவதாயும் சொன்னார்.

சொல்லிவிட்டுத் தன் காரைக் கிளப்பிச்சென்றார்.

அவரது கார் என் கண்களிலிருந்து புள்ளி புள்ளியாகிப் பின்னர் மறைந்து போனது.

No comments: