Thursday, May 5, 2011

மேலே வானம்... கீழே நியூயார்க்....

மேலே வானம்... கீழே நியூயார்க்...

வானம்-5 நியூயார்க்-1 ...... (6-April-2009)

எங்கள் கிராம வாசக சாலையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு விடுத்திருந்தனர். வாக்கெடுப்பில் 72 வாக்குகளைக் குவித்து அறுதிப் பெரும்பான்மையாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட Margaret Cohee ஒரு புதன் காலையில் ஜனவரி 21ல் பதவியேற்ற அந்த நொடியிலிருந்து எங்கள் நூலகம் புதிதாக இரத்தம் பாய்ந்த உற்சாகத்தில் புதிய புதிய மாற்றங்கள். நான் விரும்பிய வண்ணம் செயல்பட ஆரம்பித்திருந்ததை எண்ணி மகிழ்ச்சி. அழைப்பின் காரணம்....?

தேசிய கவிதை மாதத்தினை(ஏப்ரல்) முன்னிட்டு, எங்கள் தாலுகாவினைச் சேர்ந்த Julie Sheehan என்ற இளங்கவிதாயினி சமீபத்தில் Barnard Women Poets Prize, Paris Review Bernard F.Conners Prize for Poetry, Poetry Society of America Robert H.Winner Memorial Award ஆகிய விருதுகளை அள்ளிக்குவித்த மகிழ்ச்சியில் அவர் தன்னுடைய Thaw மற்றும் Orient Point என்ற கவிதைத் தொகுதிகளிலிருந்து சில கவிதைகளை வாசிக்க வந்திருந்தார். புதிதாக இலக்கிய வட்டம் ஒன்றினை ஏற்படுத்தி இந்த பகுதியில் வசிக்கும் எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட ஆயத்த பணிகள் நடந்துகொண்டிருந்தன.

எங்கள் நூலகம் சற்றே பெரிய நூலகம். விழா நடக்கும் இடம் நூலகத்தில் ஒரு வாசிப்பு அறையை ஒதுக்கியிருந்தனர். மாலை 2 மணி விழாவிற்கு சரியாக 1:40க்கு நுழைந்து எனக்குத் தேவையான தலையணைப் புத்தகங்களை என் கணக்கில் பதிவிட்டு அள்ளிக்கொண்டு நேர நிர்வாகம் பற்றிய தொடர் எழுதுவதன் விழிப்பின் காரணமாக சரியாக 1:58ல் விழா நடக்கும் இட்த்திற்கு விரைந்தேன்.

நான் கற்பனையில் நம் ஊர் கவியரங்கங்களை மனதினுள் கற்பனை செய்து வைத்திருக்க.... பெருத்த ஏமாற்றம்... ஒரு மைக்... ஒரு பத்துப் பதினைந்து நபர்கள்; அதுவும் வயதானவர்கள்... பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதியோர்கள்... விழாவிற்கு வந்தவர்களில் பெரும்பான்மையோர் பெண்மணிகள். அவர்களுடன் சில வாண்டுகள்.

நான் என் கையில் ஒரு மஞ்சள் பையுடனும் தொள தொளவென்ற தாத்தாவின் முழுக்கைச் சட்டையை முழங்கைவரை மடித்தும், ஜீன்ஸ் அணிந்து தலைநிறைய வடிய..வடிய எண்ணெய் தேய்த்து நெற்றியில் குன்னக்குடி வைத்தியநாதன் ஸ்டைலில் விபூதியும் குங்குமமும் அணிந்துகொண்டு கரங்களில் தலையணைப் புத்தகங்களைத் தூக்கமுடியாமல் சுமந்துகொண்டும் “ஙே” என விழித்துக் கொண்டே தயங்கித் தயங்கி நுழைந்தேன்.

என் தயக்கத்திற்குக் காரணம் யாரும் பரிச்சயம் இல்லை. ஒரு இந்தியர்கூட இல்லை. எல்லாம் அமெரிக்கர்கள். அதுவும் அமெரிக்க ஆங்கிலத்தில் தஸ்ஸூ...புஸ்ஸூ என அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.

எனக்கு ஆங்கிலம் என்றாலே அலர்ஜி. அமெரிக்கா வந்தால் ஆங்கில அறிவு வளரும் என நான் தவறாக எண்ணியிருந்தேன். ஆங்கிலத்தில் மற்றவர்களைப் போல் இனி சரளமாகப் பேசலாம் என்றெல்லாம் தவறாக்க் கணித்திருந்தேன். இங்கு வந்தபின் வளர்ந்த்தென்னவோ தமிழும் தெலுங்கும் மட்டுமே. திருடனுக்குத் தேள் கொட்டியது போல் “அட கெரகமே” என விழிக்க வேண்டிய நிலை...!

ஒரு முறை நான் ஐந்தாம் வகுப்பு பயிலும் பொழுது விஜயா டீச்சர் பாடம் நட்த்திக்கொண்டிருக்க நானோ விட்ட்த்தினைப் பார்த்துக்கொண்டு வேறேதோ நினைவினில் அமிழ... திடீரென சரியாக என்னை நோக்கி வினா எழுப்ப.... வழக்கம் போல் தேமே என விழிக்க.... அப்படியே அருகிலிருக்கும் மாணவனிடம் கேட்க... ”அங்க மட்டும் என்ன வாழுதாம்...?” என நான் எண்ணியவாறே அவனும் விழிக்க... கடைசி பெஞ்ச் மாணவர்கள் கொல்லென சிரிக்க... டீச்சருக்குக் கோபம் வந்து, “”Last bench get out…” எனச் சொல்ல.... கடைசி பெஞ்ச் மாணவர்கள் அமைதியாக நிற்க, நான் என் அருகிலிருந்த் மாணவனை அழைத்து கடைசி பெஞ்ச்சினைத் தூக்கி வகுப்பறைக்கு வெளியே இருக்கும் வராண்டாவில் கொண்டு போய் போட்டுவிட்டு வகுப்பறைக்குள் நுழைய.... வகுப்பறையே கொல்லென சிரிக்க.... “இந்தப் பயபுள்ளக எதுக்கு இப்டி சிரிக்றாய்ங்க...”ன்னு “ஙே”...ன்னு விழிக்க......இப்படித்தாம்யா இருந்துச்சி.. இப்பவும் இருக்குது நம்ம இங்கிலீபீஷூ...!

பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் வழக்கமாய் அமரும் கடைசி பெஞ்ச்சில் சென்று அமர்வதைப்போல் இங்கும் அமர... எனக்கு முன்னாலிருந்த ஒரு அழகிய இளம்பெண் என்னைத் தன்னருகே காலியாக இருக்கும் இருக்கையில் அமர வரும்படி அழைத்தார்.

“சே... இந்த பெண்மணி ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே...”ன்னு நினைத்துக்கொண்டேன். வடிவேலு ஒரு பட்த்தில் பார்த்திபனுடன் வங்கிக்கு ஜாமீன் கையெழுத்துப் போடச் செல்லும்பொழுது எதிரே வரும் ஒரு பலியாட்டினைப் பார்த்து வடிவேலுவிற்கு ஒரு உள்ளுணர்வு வருமே...? அது எனக்கு அப்பொழுது மிஸ்ஸிங்காகியிருந்த்து....!

வாண்டுகள் அமைதியாக சேட்டைகள் செய்துகொண்டிருந்தனர். அவர்களும் ஆங்கிலத்தில் உரையாட்... எனக்குள் பெருவியப்பு... “அட... இம்புட்டு கோணி சின்ன சின்னப் பசங்கள்ளாம் எப்பிட்றா இம்புட்டு அழகா இங்கிலீபீஷூ பேசுறாய்ங்க...”ன்னு ஒரே ஆச்சர்யமா இருந்துச்சி.

சரியாக 2 மணி ஆனவுடன் என்னருகே அமர்ந்திருந்த அந்த இளம்பெண் சரேலென எழுந்து மைக்கை நோக்கிச் சென்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்தான் அந்த கவிதாயினியாம். அடக் கெரகமே...! முன்னாடியே சொல்லக்கூடாதா...? முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவங்க கூப்ட்ட அந்தப் பக்கம் தலைவச்சாச்சும் படுத்திருப்பேனா...? ”போச்... போச்.... இனி அந்த பெண் நம்மளதான் கேள்வி கேட்கப்போறாங்க.....” எனக்கு அப்பவே விளங்கிடுச்சி. ம்ம்ம்... ஒரு மனுஷனுக்கு எம்புட்டு கஷ்டம்தான் வர்ரது ஆண்டவா...!

அந்தம்மா ஆங்கிலத்துல சொன்னதால் நமக்கு எதுவும் மண்டையில ஏறல. கையில ஐஸ் டீ எடுத்துட்டு கண்ணை மூடிட்டி ஒவ்வொரு துளியா ரசிச்சிக் குடிச்சிட்டு இருந்தேன். அது நாக்கில் அதன் சுவையை நிறுவி தொண்டையில் சுவையுணர்ந்து அப்படியே ரசித்து ஒவ்வொரு மடக்காக விழுங்கினேன். இடையிடையே அந்தம்மா சொல்லும் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் விழுந்த்து. அதுல LOVEன்ற வார்த்தை மட்டும் நல்லா தெரிஞ்சது. அந்தம்மா ரொம்ப உணர்ச்சிகளோட கவிதை படிச்சுட்ருந்தாங்க.

இங்கேயும் அந்தம்மா நிலாவினைப் பற்றிதான் கவி சொல்லிட்ருந்தாங்க. உலகத்துல எல்லா பயபுள்ளகளும் நிலாவினை விட்டுவைக்க மாட்டாய்ங்களோ....?ன்னு நெனச்சிக்கிட்டேன். கர்நாடக சங்கீதக் கச்சேரியில் நமக்கு ராகம் தாளம் ஸ்வரம் இப்படி எதுவுமே தெரியாட்டின்னாக்கூட நமக்கு அதெல்லாம் தெரியும்ன்ற மாதிரி தலையை அசைத்து அசைத்து ஒரு பாவ்லா பண்ணுவோமே....? அது மாதிரி அப்ப்ப்ப புரியறமாதிரி தலையை ஆட்டி வைச்சேன். அந்தம்மாவுக்கு ஒரே சந்தோஷம் நான் அவங்க கவிதையை நல்லா ரசிக்றேன்னு...!

அப்றம் ஒரு வழியா 4 ம்ணிக்கு கூட்டம் முடிஞ்சது. அப்பாடா... தப்பிச்சோம்ன்னு நெனச்சி எஸ்கேப் ஆகிறப்ப அந்தம்மா என்னைக் கூப்ட்டாங்க. எனக்கு எப்டி இருக்கும்...? சின்ன வயசுன்னா நான் வரமாட்டேன்... போ...........ன்னுட்டு ஓடிடலாம்..ஆனா காம்ப்ளான் குடிச்சி பெரிய பையனா ஆனபிறகு இப்ப அப்டி ஓட முடியுமா...?

வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு என்னவோ ஏதோன்னு போனேன். ”Hey…. Are you a writer…..?” அப்டீன்னு கேட்டார். அட கெரகமே...ன்னு நெனச்சிகிட்டேன். “I can read your mind….” அப்டீன்னார். எனக்கு பக்குன்னு ஆய்டிச்சி. ”அப்டியெல்லாம் இல்லைம்மா.... நான் கிறுக்கனா இருக்றதால நம்பிக்கை,முத்தமிழ் இதுமாதிரி கூகிள் குழுமங்கள்ல அப்ப்ப்ப எனக்கு மூடு வர்ரப்ப தமிழ்ல்ல ஒன்னு ரெண்டு..கிறுக்குவேன்... அம்புட்டுதான். தாயி..! “

“ஆங்கிலத்தில் எதுவும் முயற்சிக்கவில்லையா....?”

“Mind Engineering, The Art of Excellence, The Art of Studying” அப்டீன்னு முயற்சி மட்டுமே பண்ணினேன். அதுக்கப்றம் மூடு வர்ல. ஏறக்குறைய ரொம்ப வருஷங்கள் கழிச்சி இப்போ திரும்பவும் டெக்னிக்கல் கட்டுரைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றேன்...”

“எழுது...எழுது...இலக்கியத்தில் நீ எழுது... தொடர்ந்து எழுது... வானம் ஒரு நாள் வசப்படும்... கண்டிப்பாக ஒரு நாள் நோபெல், புலிட்சர் போன்ற உயர் பரிசு கிடைக்கும்...”

“அட... நீங்க எப்டி சொல்றீங்க....? ரொம்ப ஆச்சர்ய்மா இருக்கே..!”

“நீ டீ குடிச்ச ஸ்டைலேருந்தே கண்டுபிடிச்சேன்.... எல்லாமே உணர்கின்றாய்.... ரசிக்கின்றாய்... இதுதான் ஒரு எழுத்தாளனுக்குத் தேவை...”

“இல்லையம்மா... .நான் டீ குடித்தது ஜென் மெடிட்டேஷன்... அது ஒரு தவம்.... நான் எதையுமே அப்படித்தானம்மா செய்வது வழக்கம்....உங்கள் கணிப்பு தவறாகிவிட்ட்தே....”

இப்பொழுது கவிதாயினி “ஙே” என விழித்துக்கொண்டிருந்தார்.

பை சொல்லிவிட்டு இடத்தைக் காலிசெய்தேன்.

மேலே வானம்...கீழே நியூயார்க்...

மேலே வானம்...கீழே நியூயார்க்...

வானம்-4 நியூயார்க்-1 ...... (10-August-2008)

இன்னும் மதிய உணவு சாப்பிடவில்லை. இன்றும் நேற்றுமாதிரி கிரிக்கெட் விளையாடலாமா...? என யோசித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் பந்து ஆசையுடன் என்னை முத்தமிடும்பொழுது எனக்குள் எத்தனை காயங்கள்....?. என் மாணவப் பருவத்தில் முன்பு ஒரு முறை என் மூக்கையும் நெற்றியையும் பதம் பார்த்தது. சென்ற வருடமும் ஒரு மிகப்பெரிய விபத்து.

ஒவ்வொருமுறை பந்து விழும்பொழுதெல்லாம் உலகமே இருண்டுவிட்டது போன்ற ஒரு உணர்வு. இனிமேல் கிரிக்கெட்டை மூட்டை கட்டி வைத்துவிடவேண்டும் என ஒவ்வொருமுறையும் நினைப்பதுண்டு. நேற்றும் இரவு 8 மணி வரை கிரிக்கெட் விளையாடியதில் வேகமாக வந்த பந்தினைத் தடுக்க, அது சரியாக என் கால்களின் முட்டியால் தடுக்க, முட்டி, பந்தினால் முத்தமிடப்பட்டு வலியால் துடித்தது.

வீட்டுப் பெரியவர்கள் ஃபோன் பண்ணி, இனிமேல் கிரிக்கெட் மட்டையே பிடிக்கக்கூடாது என தடா போட்டதினால் ஒரு இரண்டொரு நாட்களுக்கு (மட்டுமே...!) நல்ல பையனாய் இருந்தாக வேண்டிய சூழல்

கிரிக்கெட்டிற்காகத் தேர்வுகளையே ஒத்திவைத்த சரித்திரம் எங்கள் யுனிவர்சிடியில் நடந்தது. அப்பொழுது உலகக் கிரிக்கெட். நாங்கள் அனைவரும் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம். எனவே யுனிவர்சிடி துணைவேந்தருடன் பேசி பல்கலைத் தேர்வுகளை கிரிக்கெட் ஜூரம் முடிந்தவுடன் நடத்தும்படிக் கேட்டுக்கொண்டு அதில் வெற்றியும் பெற்று கிரிக்கெட்டைக் கண்டு மகிழ்ந்தோம்.

இறுதியாண்டில் பல்கலைபோட்டியில் எதிர்பாராவிதமாகக் கடைசி பந்தில் நான் அடித்த ஒரு சிக்சர் எங்கள் கிரிக்கெட் அணி வெற்றிபெற காரணமாகிப்போனது என்னாலேயே அந்த நொடியில் நம்பமுடியவில்லை. ஏனெனில் நான் கிரிக்கெட்டினை என்றுமே நேர்த்தியாக விளையாடியதில்லை. அதனை கிட்டி என அழைக்கப்படும் கில்லி போன்றே எங்கள் கிராமத்து ஸ்டைலில் விளையாடக்கூடியவன்.

அப்பொழுது கவாஸ்கர் புகழின் உச்சியிலிருந்தார். ஆனாலும் எனக்கு கபில் மிகப்பெரிய ஹீரோவாகத் திகழ்ந்தார். அதற்குப் பல காரணங்கள். முதன்மையான காரணம் அவரது தன்னம்பிக்கை கலந்த அந்த ஆளுமை.

என் வாழ்வின் ஒவ்வொரு கடினமான பொழுதுகளிலும் கபில் பந்துவீசுவதையும் உலகக்கோப்பைக்காக தனியொரு ஆளாகவே நின்று ஜிம்பாப்வேயை வெளுத்துக் கட்டியதும் மட்டுமே அடிக்கடி என் மனதினில் படமாய் விரிவடையும்.(இத்தனைக்கும் அந்த உலகக்கோப்பையின்பொழுது எனக்கு கிரிக்கெட் அவ்வளவு பரிச்சயம் இல்லை. மேலும் டிவிகள் வராத காலகட்டங்கள். எல்லாம் பத்திரிகைகளின் உதவியால்...) உடனே உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

எங்கள் யுனிவர்சிடியில் பெளதிகத்தில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வெளியுலகிற்கு ஒளிவீசிய விஞ்ஞானி்கள் பலர். எனவே வருடத்திற்கு இருவர் அல்லது மூவர் மட்டுமே தேர்ச்சியடையவேண்டும் என்பது அன்றைய காலகட்டங்களில் எழுதப்படாத ஒரு சட்டமாக இருந்தது.

வைவா என்றொரு சடங்கு ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு மூன்று மணிநேரம் நிகழும். IIT, IISc மொசைக் தலை பேராசான்களும் BHU, Pune University என பல்வேறு பல்கலைக்கழகப் பேராசான்கள் இரையை விரட்டும் புலி போல ஒரு குழுவாக அமர்ந்திருப்பர்.

எங்கள் யுனிவர்சிடியில் எங்கள் துறையில் முதுநிலை இறுதியாண்டில் ஒரு 12 மாணவர்களும் ஒரே ஒரு மாணவியும் இருந்தோம் எங்கள் 13 மாணவர்களுக்கும் வைவா மட்டும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும். முதல் பலியாடு சாட்சாத் நானேதான்..!

Millman Halkias, JD Ryder, J.Brophy, C.Kittel, Ritz & Milfred, Malvino Leach, Irving Kaplan, John Benedict, Eugen Merzbacher, Robert D Evans இன்னும் பல ஜாம்பவான்களின் தலையணைப் புத்தகங்களைத் தலைகீழாய் கரைத்துகுடித்துவிட்டும் IISc யிலிருந்து வெளிவரும் Journalகளையும் படித்துவிட்டு வைவாவிற்குச் சென்றால் ஒரு கேள்விக்குக் கூட விடையளிக்க இயலாது. எல்லாம் நம் மூளையைப் பயன்படுத்தி பதிலளிக்கும்படியாய் இருக்கும்.(அதுதான் நமக்கு இல்லாத ஒன்றாயிற்றே...!) பாதி பயத்தில் நாக்கு குழறி உடலெல்லாம் வேர்த்துக் கொட்டும்.

அப்பொழுதெல்லாம் கபில்தேவின் அந்த தன்னம்ப்பிகையினையே நான் மானசீகமாக உருவகிப்பேன். நானும் இப்பொழுது ஒரு கபில்தேவ். வினாக்கள் என்ற பந்துகளை பவுண்டரிகளுக்கும் சிக்சர்களுக்கு விளாசுவதைப்போல் கற்பனை செய்துகொள்வேன்.

ஸ்ரீகாந்தின் அதிரடி ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். வெங்சர்க்கார் நிதானமாய் விளையாடி 50 ரன்களை சேர்த்துவிட்டு தன் கடமை முடிந்தது என்று போய்விடுவார். ரவி சாஸ்திரியை 'கட்டை போட்றான்' என கமெண்ட் அடிப்போம். சில (பல) வேளைகளில் பொறுப்பில்லாமல் ஆடுவார்.

மணிந்தர் சிங்கை முனி மணிந்தர் என்போம். கவாஸ்கர் உலகத் தரத்திலிருந்தாலும் அவர் ஒரு நாள் ஆட்டத்தில் 1987 ல் ஜிம்பாப்வேக்கு (சரிதானே...? ) எதிராக முதன் முறையாக சதம் அடித்தார். அவரது ஆட்டம் ஏனோ என்னைக் கவரவில்லை!

வைவாவில் இந்த உத்தி எனக்கு கைகொடுத்தது.

Linear ICயும் Non-Linear ICயும் எப்படி வேறுபடுகின்றது…? என ஒரு IIT புரபசர் கேட்க அன்று அதிகாலை 6 மணிக்குத்தான் நூலகத்தில் (எங்கள் நூலகம் 24 மணிநேர நூலகம். லேபும் அப்படியே..! ஏறக்குறைய ஆராய்ச்சி மாணவர்கள் போல் படித்தோம்..!) அன்றைய லேட்டஸ்ட் ஆராய்ச்சி நிலவரம்(Integrated Circuit) IISc மாகசினைப் படித்துவிட்டிருந்தேன்.

காலை 7 மணிக்கு எனக்கு வைவா. நான் முதல் மாணவன் என்பதால் அது மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்டு 4 மணி நேரத்தினைத் தொட எத்தனித்தது.
கபில்தேவ் மாதிரி தன்னம்பிக்கையுடன் விளாசித்தள்ளினேன். ஆனாலும் அந்த IIT புரபசர் நம்ப மறுத்தார்.

நான் அந்த Journalலில் இந்த பக்கத்தில் இப்படித்தான் அதனது I-V Features Curve இருக்கின்றது என ஒரு குறிப்பிட்ட IC யினை மையமாக வைத்து Derivation னெல்லாம் கரும்பலகையில் derive பண்ணி சரியென வாதிட்டேன். அதற்குக் காரணம் கபில்தேவின் அந்த தன்னம்பிக்கை மனோபாவமே.

வைவாவில் பாசான அந்த மூன்று மாணர்களுள் அடியேனும் ஒருவன்....! மற்ற அனைவரும் கடின உழைப்பாளிகள் + (Born Genius) எனப்படும் அறிவாளிகள். நான் ஒருவனே ஒன்றாம் வாய்ப்பாடு கூடத் தெரியாத ஒரு மக்கு மாணவன்…!

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தென்கோடியில் ஒரு குக் கிராமம். கில்லி, பேந்தான், கபடி, நீச்சலடித்து விளையாடுதல், காக்கா குஞ்சு, கள்ளம்போலீஸ், ஐஸ்ப்ளே, பேங்க்கர், பாவக்கூத்து, நாடகம், நடனம்ன்ன்னு இப்படித்தான் எங்களோட விளையாட்டுக்களிருக்கும். கிரிக்கெட்டுன்னா என்னன்னே எனக்குத் தெரியாம இருந்துச்சி பள்ளி இறுதிவரை. பள்ளியில் Soft Ball என்ற விளையாட்டினை நாங்கள் விரும்பி விளையாடுவோம். அதுவும் ஏறக்குறைய கிரிக்கெட்டைப் போன்றே இருக்கும். ஆனால் அதிக வித்தியாசங்கள்.


ஒரு முறை வானொலியில் ஒரு வர்ணனை கேட்க நேரிட்டது.

அப்பொழுது அது எதோ ஒரு விளையாட்டு என்று மட்டும் எனக்குப் புரிந்தது. அதில் அந்த வர்ணனையாளர், 'பந்து இப்பொழுது பெளரிடமிருந்து (இதுக்கு தமிழ்ல்ல என்னன்னு தெரியல. ஆனா அந்த வர்ணனையாளர் தூய தமிழ்ல்லதான் சொன்னார்.) மட்டையாளரை நோக்க்சிச் செல்கின்றது..... மட்டை மீது பட்டு தெறித்துச் செல்கின்றது... தடுப்பாளர் அதனை எக்கிப் பிடிக்க முயல்கின்றார்.... மழுமழுவென சேவிங் செய்யப்பட்ட மீசையிலிருக்கும் அந்த மீசைமுடி அளவு இம்மியின் தொலைவில் பந்து நழுவிச்செல்கின்றது...' என்ற பொருள் பட வர்ணித்தார்.

இந்த வர்ணனை என்னை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது. முதலில் அது Soft Ball லோ என நினைத்தேன். பின்னர் அது கிரிக்கெட் எனத் தெரிந்தது. இப்படித்தான் எனக்கு கிரிக்கெட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்பொழுது அந்த வர்ணனையாளர் வர்ணனை செய்த விதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவரது பெயர் என்ன என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் அது 1980 அல்லது 1981 (வருடம் கூட நினைவிலில்லை) களில் சேப்பாக்கத்தில் நடந்தது. இந்தியாவிற்கும் இன்னொரு அணிக்கும்.

கிரிக்கெட்டில் அப்பொழுது எனக்கு பரிச்சயமில்லாததால் இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. பின்னால் இந்த வர்ணனை என் வாழ்வில் நம்ப முடியா ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. அந்த வர்ணனையாளர் பின்னாளில்(2007) என் நண்பரானார். அவர் என் எழுத்திற்கு விசிறியாகி அவராகவே முன்வந்து நட்பு உருவாக்கியது மிகவும் நெகிழ்ச்சியாக்கியது என்னை. இந்தியாவிற்கு வந்தால் தங்களது வீட்டிற்குக் கண்டிப்பாக வரவேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்தார் அந்த பெரியவர்.

1996 கோப்பையில் இல்ங்கை அணி ஒரு புதிய பாடம் சொல்லிக்கொடுத்தது. ஒரு பந்திற்கு ஒரு ஓட்டம் என 300 பந்துகளில் 300 ஓட்டங்களை எடுக்கவேண்டும் என. அதுவரை கிரிக்கெட்டில் யாருமே அப்படி சிந்திக்கவில்லை.

முதல் பத்து பதினைந்து ஓவர்களில் கட்டை போட்டு அவுட்டாகாமல் நிற்பது; பின்னர் கடைசி பத்து ஓவர்களில் அடித்து அதிரடி ஆட்டம் ஆடுவது என ஒரு 200 ஓட்டங்கள் எடுத்தாலே மகிழ்ச்சியாகிவிடும் காலமது.

இலங்கை அணியே அதனை உடைத்தெறிந்தது. ஆரம்பம் முதலே அடித்து ஆடி ஒரு பந்து - ஒரு ஓட்டம் அதில் குறியாக இருந்தனர். காலம் கைகூடும்பொழுதெல்லாம் சிக்சரும் ஃபோருமாக வெளுத்து சர்வசாதாரணமாக 300 ஓட்டங்களை எவ்வித சிரமமுன்றி எடுக்க முடிந்தது. மேலும் அவ்வணியின் தலைவர் அவ்வணியை மிகவும் கட்டுக்கோப்பாக நடத்திச் சென்றார்.

சில சமயங்களில் ஜெயசூர்யா தன் வெற்றிக்களிப்பு மமதையில் கொஞ்சம் துள்ளும்பொழுதெல்லாம் விழிப்பு நிலைக்கு கொண்டு வந்து அனைவரையும் அடக்க ஒடுக்கமாய் நடக்க வழிவகுத்தார்.

எதிரணியினர் கூட இவ்வணியின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தது. எங்கு விளையாடுகின்றனரோ அந்த ஊர் மக்களும் ஆதரவளித்தனர். ஆட்டம் முடிந்ததும் ஒரு பிரார்த்தனை. பெளத்த மதத்திலிருந்த ஜென் தவத்தினை ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்தினர். தன்னிலை இழக்காது நடுநிலை பிசகாது அளவற்ற பொறுமையுடன் நடந்துகொண்டனர். மிகவும் பொறுப்பான தலைமை.

இப்படி கிரிக்கெட் இந்த நொடிவரை என் வாழ்வில் என்னையறியாமலேயே பின்னிப் பிணைந்துவிட்டது.

சரி மூலக்கதைக்கு வருவோம்.

பக்கத்து அபார்ட்மெண்ட் நண்பர்கள் வருகை. வெளியே எங்காவது கிளம்பலாம். இரண்டு தக்காளிகளை ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில் கூழாகும் வரை வதக்கி அதன்பின்னர் அதனுடன் தட்டிய இஞ்சி+ பூண்டுத் துண்டுகள், ஒரு தேக்கரண்டி சீரகம், அரைத் தேக்கரண்டி மிளகு, மஞ்சள் பொடி, ரசப்பொடி, உப்பு, மல்லித் தழை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கினால் இதுவரை இல்லாத ஒரு புதிய தொரு வடிவம் பெற்றது. ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து, புளியை மைக்ரோவேவ்வில் சூடுபடுத்தி கரைத்து அந்த தக்காளிக் கலவையில் கலந்து கொதிக்கவைதது,. மீண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து தாளிதம் செய்து இறக்கினால் அருமையான ரசம் தயாரானது. சாப்பிடப்போவது நண்பர்கள்தானே (ஏனெனில் நான் பூண்டு இஞ்சி சாப்பிடுவதில்லை) என நினைத்து 'அப்பாடா... அது அவர்களின் தலைவிதி....! விதி அப்படி இருக்கும்பொழுது நான் என்ன செய்துவிடமுடியும்....?' என்னை நான் சிறிது ஆற்றுப்படுத்திக்கொண்டேன்.

முக்தமயி சர்க்கார். இந்தப்பெண் சுவீடனில் MS Computer Science முடித்தகையுடன் சென்றவருடம் இங்கே வந்துவிட்டார். Md.Mulla Khairul Bhasar இந்தப் பையனும் Swedan MS. இருவரும் பங்களாதேஷில் டாக்கா. ஏறக்குறைய நம் பெங்காலிகளின் வாழ்க்கை முறையையொத்து இருக்கின்றது பங்களாதேஷ் மக்களின் வாழ்க்கை முறை.

இவர்களிருவரும் என் சமையலின் தீவிர ரசிகர்கள்.

சாப்பிட்டு முடித்ததும் நடையை ஆரம்பித்தோம். எங்கு செல்லலாம்…?
நான் வசிக்கும் இந்தக் கிராமத்தினைப் பற்றி…?

Port Jefferson. இதுதான் நான் வசிக்கும் ஒரு அழகிய கிராமம். இந்தக் கிராமம் பணக்காரர்கள் தங்களது வாழ்க்கையை அனுபவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கிராமம். விலைவாசிகள் நியூ யார்க்கில் மன்ஹாட்டன் போலவே இங்கும் அதிகம். ஆனால் நியூ யார்க் போன்று ஜன நெருக்கடி இருப்பதில்லை.

இங்கே தொழில்கள் என்றால் எதுவும் மிகப்பெரிய அளவில் இல்லை. மீன்பிடி உண்டு. துறைமுகம் உண்டு. மற்ற தொழில்களெல்லாம் பக்கத்து பக்கத்து ஊர்களில். இந்த கிராமம் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான அமைதியான வாழ்க்கை வாழ்வதற்காகவே அமைக்கப்பட்டது....என் பெரும்பாலான ஓய்வு நேரங்கள் இங்கிருக்கும் நூலகத்தில் செலவழியும்.

<<<<<<<<<<<<< கீழேயுள்ள படம் எங்கள் கிராம நூலகம்.... >>>>>>>>




துறைமுகம் நோக்கி நடைபயின்றோம்.

வழியில் ஒரு ஐஸ்க்ரீம் பார்லருக்குள் நுழைந்தோம். ஒரு சிறுவன் தன் அப்பாவிடம் ஒரு குறிப்பிட்ட ஐஸ்க்ரீம்தான் வேண்டும் என அடம்பிடித்தான். தன் கோபத்தினை தன் முக பாவங்களில் காட்டினான். கை கால்களை உதறி கத்த ஆரம்பித்தான்.

குழந்தைகள் கோபப்படும்பொழுதும் கூட எவ்வளவு அழகாய் இருக்கின்றனர்....?

குழந்தைகள் எவ்வளவு மென்மையானவர்கள்….?

ஒரு ஆறுமாதக் குழந்தையைப் பாருங்கள்...! பஞ்சுபோலிருக்கும் அந்தப் பிஞ்சுக் கரங்கள்.... ! தன் கண்களை இடுக்கி, 'ஆர்ரா இவன்....?' எனப் பார்க்கும் அந்த பார்வை...!

நாம் குழந்தையின் கரங்களைப் பற்றினால் தன் பிஞ்சுக் கரங்களினால் நம்மை இறுகப் பற்றிக்கொள்கின்றதே... அந்த பிடிப்பில், 'நீ என்னைக் கைவிட்டாலும் நான் உன்னைக் கைவிடமாட்டேன்....? ' என்ற தகவலைச் சொல்கின்றதா அல்லது ' நான் இப்பொழுதுதான் உங்கள் புவி கோளிற்கு வந்திருக்கின்றேன்...என்னைக் கைவிட்டுவிடாதே.. உன்னைத்தான் நம்பியிருக்கின்றேன்....' என்கின்றதா...? தன் பாதுகாப்பின்மையை உணர்த்துகின்றதா...? அல்லது 'நீ நல்லவன் ...உன்னுடன் நட்பு கொள்ள விரும்புகின்றேன் ‘ என சமிக்ஞை செய்கின்றதா…?

ஏன் எல்லா குழந்தைகளும் அழகாய் இருக்கின்றனர்....?

குழந்தையின் ஜீவகாந்தமே காரணம். ஒரு மலரினைப் பார்க்கும்பொழுது மனம் எப்படி மகிழ்கின்றதோ... அதே போல்...!

ஜீவகாந்தம் அதிகத் திணிவிருந்தால் குழந்தையின் அந்த காந்த வசீகரம் கிட்டுமோ....? அப்படியெனில் யோகாவில் பெரிய பெரிய மகான்களிடம்கூட அந்த காந்த கவர்ச்சி இல்லையே...? அது ஏன்...? எண்ணங்களோ....? கள்ளங்கபடமில்லா எண்ணங்களோ..?

குழந்தைகளைப் பார்க்கும்பொழுதெல்லாம் மனம் சொல்லொணா ஒருவிதப் பரவச நிலையையடைகின்றதே அது ஏன்...? குழந்தை சிரிக்கும் சிரிப்பில் மனம் சொக்கி நம் கவலைகளெல்லாம் காணாமல் கரைந்து போகின்றதே அது ஏன்...?

'ம்ம்ம்மா....' என தன் பேச்சு வராத மழலை பாஷையில் என்னவோ சொல்கின்றதே...!

ஏன் உலகினில் எல்லா குழந்தைகளுமே 'ம்ம்ம்மா...' என்றே முதன் முதலில் குரல் கொடுக்கின்றதே அது எப்படி...? அனைவரையுமே நம்புகின்றதே...! அனைவரிடமும் கள்ளங்கபடம் பாராட்டது ஞானியைப் போல் எப்படி நட்பு கொள்ள முடிகின்றது....? கோபத்தில் அம்மா அடித்தாலும் மீண்டும் அம்மாவைச் சுற்றியே அன்பாய் வலம் வருகின்றதே… எவ்வித கோபமுமின்றி அது எப்படி…?

அழும் குழந்தையை அம்மா வாஞ்சையாய் முதுகில் தடவிட குழந்தை சிறிது நேரத்தில் இயல்பாகின்றதே அது எப்படி...? இவ்வளவு நியூட்டன் விசையில் இத்தனை வேகத்தில் இத்தனை பரப்பளவுள்ள ஒரு கை இத்தனை சதுர பரப்புள்ள குழந்தையின் முதுகில் இத்தனை நொடிகள் தடவினால் குழந்தை சமாதானமாகிவிடும் என்று நான் படித்த இயற்பியலில் நியூட்டனும், ஐன்ஸ்டினும் சொல்லித்தரவே இல்லையே...!

இங்கே என்ன நடக்கின்றது...? கண்களுக்குப் புலனாகா எதோ ஒரு சக்தி அம்மாவிடமிருந்து குழந்தைக்கு பரிமாற்றமடைகின்றதோ...? என்ன அது...? அன்புதானோ...? அன்பிற்கு அவ்வளவு வலிமையா....? அதனால்தான் அன்பே சிவம் என்கின்றனரோ...?

ஏன் அழும் குழந்தைகள் சிறிது நேரத்தில் தூங்கிவிடுகின்றனர்....? அழுகைக்கும் தூக்கத்திற்கும் தொடர்புண்டோ...? அவர்களின் இதயம் நொடிக்கு 148 தடவை அடிக்கின்றது....? தலையின் மையப் பகுதியில் துரியம் அவர்களுக்கு மட்டும் எப்படித் துடிக்கின்றது...? இதுதானே பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கின்றது. ..? Seed of souls ... அதனால்தானோ குழந்தைகள் கடவுளுக்குச் சமம் என்கின்றனரோ...?

குழந்தை தன் தேவைகளை வெளியுலகிற்கு அழுகையின் மூலம் வெளிப்படுத்துகின்றதே...அறிமுகமில்லா எந்தக் குழந்தை அழுதாலும் நம் மனம் பதைபதைக்கின்றதே அது ஏன்...? அது தன் மழலை பாஷையில் 'ங்கா...ங்கா...' என எதையோ சொல்லிச் சிரிக்கின்றதே... நமக்கு ஒன்றுமே புரியவில்லை.

எல்லாவற்றையுமே குழந்தை எப்படி ஆர்வமாய் புதுமையாய் பார்க்கின்றது....? உடனே அதனை ஆராய்ச்சி பண்ணும் வேலையில் இறங்கிவிடுகின்றதே...? குழந்தைகள் மிகப் பெரிய விஞ்ஞானிகளோ....? ஏன் எதற்கு எப்படி...? என சதா ஆராய்ந்து கொண்டேயிருக்கின்றதே...! இது பாம்பு இது நாய் என்ற பாகுபாடின்றி அனைத்து ஜீவராசிகளிடமும் சிரிக்கின்றதே...? அதேபோல் பாதுகாப்பின்மையும் பயத்தினையும் உணர்கின்றதே...? குழந்தையின் உற்சாகம் மகிழ்ச்சியளிப்பது ஏன்..?

குழந்தைகள் சிலரின் அருகாமையை விரும்புகின்றதே...! சிலரின் அருகாமையை வெறுக்கின்றதே...! எப்படி இதெல்லாம் சாத்தியம்...? நம் உணர்வுகளையும் எண்ண அதிர்வுகளையும் குழந்தைகள் உணர்கின்றனவோ....? அதனால் எளிதில் எப்படி உணர முடிகின்றது....? அங்கே மொழியில்லை; சைகை இல்லை...ஆனாலும் எப்படி குழந்தைகள் இவ்வளவு நுட்பமாக இருக்கின்றன...?


குழந்தையின் குதூகலமும் அதன் சேட்டைகளும் அனைவரும் விரும்பி ரசிக்கின்றனரே...அது ஏன்...? அதே குழந்தை கொஞ்சம் பெரியவனானால், 'எருமை...தண்டம்...சனியன்...' என ஏன் பெரியவர்கள் அர்ச்சிக்கின்றனரே....? என என் மனதினில் ஒழுங்கின்றி சிந்தனையோட்டங்கள் தாறுமாறாக எங்கெங்கோ சுழன்றன.

எனக்குப் பிடித்த வெண்ணிலா ஐஸ்க்ரீமை வாங்கிக்கொண்டு நகர்ந்தோம். கடல் பார்ப்பதற்கு எங்கள் ஊர் கண்மாயினை விட கொஞ்சம் பெரிதாகத் தென்பட்டது. இதனையா கடல் என்கின்றனர்...? என எனக்குள் வியப்பே மேலிட்டது.

தலைக்கு மேலே பெயர் தெரியா சில கடல் பறவைகள் வட்டமடித்தன. ஒரு கப்பல் டைட்டானிக்கினை இமிடேட் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தது. அருகேயிருக்கும் கனக்ட்டிகட் என்ற மாநிலத்திற்கு இந்தக் கப்பலில் பயணிக்கலாம். தினமும் இங்கிருந்து சிலர் அந்த மாநிலத்திற்கு வேலைக்குச் சென்று திரும்பிவருகின்றனர். காரினை கப்பலிலேயே கொண்டு செல்கின்றனர்.

சில கலாசாலை இளைஞிகளும் இளைஞர்களும் ஒரு படகினை தயார் செய்துகொண்டிருந்தனர். நடுத்தர வயதுள்ள ஒரு மாமி கடற்கரையிலிருந்த பாதுகாப்பு வளையத்தின் விளிம்பில் பதைபதைப்புடன் நின்றுகொண்டிருந்தார். அவர்கள் படகினைச் செலுத்தி கடலுக்குள் கண்ணின் பார்வையிலிருந்து காணாமல் போயினர். இந்த மாமி ஒவ்வொரு நொடியும் பதைபதைத்துக்கொண்டிருந்தார். பின்னர்தான் தெரிந்தது... அந்த இளைஞிகள் இவரது குழந்தைகள் என.

வேந்தன் அவர்கள் என்னைப் பலமுறை எழுதச் சொல்லிக் கேட்டுக்கொண்ட அந்த முத்த நிகழ்வுகளை இளைஞர்களும் சரி வயதான மூதாதையர்களும் சரி வஞ்சகமின்றி நிகழ்த்திக்கொண்டிருந்தனர். இந்த ஊர் கலாச்சாரத்தினைப் பற்றியும் இந்த ஊர் குழந்தைகளைப் பற்றியும் எங்கள் பேச்சுத் திரும்பியது.

எனக்குத் தமிழ் தவிர வேறு எந்த ஒரு மொழியும் சரியாகத் தெரியாததால் அந்த பங்களாதேஷி நண்பனும் நண்பியும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதினை மிகவும் புரிந்தது போல் தஞ்சாவூர் பொம்மை போல் 'யெஸ்....யெஸ்.... ஐ நோ...' எனத் தலையாட்டிக்கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் எனக்கும் கூட கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் புரிய ஆரம்பிக்கின்றது. வழக்கம்போல் ங்க்கு,ங்க் எனச் சேர்த்துக்கொண்டே சமாளித்துவிடுகின்றேன்.

இரவு எட்டரை மணியானாலும் இன்னும் சூரியன் தூங்கச் செல்லாமல் சுட்டெரித்துக்கொண்டுதானிருக்கின்றான்.

அவர்கள் தங்களது பங்களாதேஷ் நாட்டினைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தனர். அந்நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிக்கொண்டே வருவதாயும் முன்னேற்றப் பாதையில் சிறு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் இருப்பதாயும் மிகவும் வருந்தினர். இந்தியா நல்ல ஒரு முன்னேறிய நாடு என்றனர்.

என் முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவமாடியது.

Saturday, March 26, 2011

மேலே வானம்... கீழே நியூயார்க்....
வானம்-8 நியூயார்க்-1 3-July-09


மாலை 8 மணிக்கு சூரியன், ”இன்று இனி நாம் உறங்கப்போகலாமா...?” என சிந்தித்து மெல்ல மெல்ல அந்தியை நெருங்க முயற்சித்துக் கொண்டிருக்க.... கடலின் மையத்தில் அமைக்கப்பட்ட மர இருப்பின் மீது அமர்ந்துகொண்டு கால்களை ஆழமான கடலின் நீரில் நீட்டியபடி அருகிலிருந்த கப்பலினை வேடிக்கை பார்த்துக்கொண்டே ஒரு கையில் இருந்த Dunkin Donuts Coffeeயை எப்பொழுதும் போல் துளித்துளியாய் ஒவ்வொருத் துளியையும் ரசித்து ருசித்து குடித்துக்கொண்டே கடலினலைகளையும் ஆகாயத்தினையும் லயமாய் ஒரு தவம் செய்வதைப் போல் செய்துகொண்டிருக்க,

பில்கேட்ஸ் அண்ணன் எனக்குப் பரிசளித்த அந்த Balckjack-II செல்ஃபோன் செல்லமாய் சிணுங்க, “ஆர்ரா இது இந்நேரத்துல.....? ” என சோம்பலாய் செல்ஃபோனை உயிர்ப்பிக்க, எதிர்முனையில் சாகித்யமும் ஞானபீடமும் புலிட்சரும் நோபெல்லும் என அனைத்துப் பரிசுகளையும் வெல்லும் வீரிய வித்துக்களைத் தன்னுள்ளே கருவாய் சுமந்து இசைக்கும் கவிஞன் நிலாரசிகன்....!!!

“ஐயா... நாளை சுவாதியக்கா அவர்களின் வீட்டில் ஜமா ... ” என அழைப்பு விடுத்தார்.

“சரி வருகின்றேன்....” எனக்கூறிவிட்டு தினமும் கடலிடம் பேசிவிட்டு வருவதால் இன்று அவசரமாக ஒரு ”பை” மட்டும் சொல்ல்விட்டு நடையைக் கட்டினேன்.

வழியில் ஒரு 60 அல்லது 70 வயதுப் பெரியவர்.

“தம்பி.... நான் சொல்றேன்னேன்னு தப்பா நெனச்சிக்க மாட்டியே....?”

“ஊஹூம்... சொல்லுங்க....’

“உங்க ஜீன்ஸின் பின்பாக்கெட் கிழிந்திருக்கின்றது.... வாலட் கீழே விழப்போகின்றது.... ஜாக்கிரதை....”

“அடக் கெரகமே....! உங்களுக்கு விஷயமே தெரியாதா....? ”

“..........” என்ன என்பதினைப் போல் ஆர்வமாய் தன் புருவத்தினை உயர்த்தினார்.

“இந்த ஜீன்ஸை நான் விலைக்குவாங்கும்பொழுது என்னோட நண்பர்கள்தான் இதனைத் தேர்ந்தெடுத்தனர் கிபி 2007ல். அப்பொழுதே இந்த பின்பகுதி நைந்திருந்த்து. அப்பொழுதே அவர்களிடம் சண்டைக்குப் போனேன், “ஏம்ப்பா இப்டி கிழிஞ்ச துணியை விலைக்கு வாங்கணும்”னு....?. அதுக்கு அவங்க சொன்னாங்க, “என்ன சார் இன்னும் நீங்க சின்னப்பையனாவே இருக்கீங்க.... இப்டி நைஞ்சியிருந்தாத்தான் சார் ஃபேஷன்....! ஊஹூம் நீங்கள்ளால் முன்னேற இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகும் சார்”.... அப்டீன்னாங்க.... ” என்று அந்த பெரியவரிடம் சொன்னேன்.

“என்ன கெரகமோ போ....!” என சலித்துக்கொண்டார். அவருக்கு மரியாதை செலுத்தும்வகையில் அவர்கூற்றின்படியே என்னுடைய பணப்பையை இடம் மாற்றினேன்.

வீட்டிற்கு வந்தால் ஆன்லைனில் சுவாதி...! எனக்குள் ஒரே மகிழ்ச்சி. ஏனெனில் இவர் ஒரு முறைகூட தங்கள் வீட்டில் சாப்பிட அழைக்கவில்லை. நானும் என்றாவதொரு நாள் இவர்களின் வீட்டிற்குச் சென்று டிநகர் கனகதுர்கா என்ற ஆந்திர மெஸ்ஸில் நண்பர்களுடன் ஒரு ”கட்டு” கட்டுவதைப் போல் கட்டிவிட்டுவரவேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன். அது நாளை நனவாகப்போகின்றது என்பதில் மிக்க மகிழ்ச்சி.

சுவாதியக்கா அவர்களின் வீட்டிற்கு வழிகேட்டேன்.

“என்னப்பா இது...? ஸ்டேடன் ஐலேண்டில் இறங்கி என் பெயர் சொன்னால் போதாதா....?” என்றார்.

”இல்லை, எனக்கு முன்பின் தனியாகச் சென்றுபழக்கமில்லை. மிகவும் பயப்படுவேன்.”

“ஹேய்.... பொய் சொல்லாதே... சென்றவாரம்தான் நீ நியூயார்க்கில் 30வது வீதிக்கும் 29வீதிக்குமிடைப்பட்ட ஒரு கட்டிட்த்தில் 16 ஆவது மாடியில் தவப்பயிலரங்கம் நடத்தச்சென்றாயே...! நினைவிருக்கின்றதா....?”

“தெரஸா என்ற சிஷ்யை நேரடியாகவே ரயிலடிக்கு வந்து என்னைக் கட்டிப்பிடித்து வாழ்த்துச்சொல்லி அழைத்துச்சென்றார்...! அதனால் என்னால் எளிதாகச் செல்லமுடிந்த்து...! ”

“அடக்கெரகமே....! என்ன...கட்டிப்பிடிச்சாங்களா...? ம்ம்ம்ம் தவம் நடந்த மாதிரிதான்....? உங்கள் வீட்டில் சொல்லிவிட்டீர்களா....?”

“ஐயோ...இல்லை...இல்லை....நீங்கள் நினைப்பது போல் அல்ல... அவர் ஒரு ரெவரெண்ட்., சர்ச்சில் ஒரு மினிஸ்டர், தவத்தில் சிறந்த நிபுணர், வால் ஸ்ட்ரீட்டில் பொருளாதாரவிதிகளை நிர்ணயிக்கும் ஒரு சிருஷ்டி. தங்களது அன்பினை இந்த தேசத்துப் பண்பாட்டினில் வெளிப்படுத்துகின்றார். என்னை அன்பாக ”சகோதரனே” என்றே விளித்தார்கள். என்னுடைய நட்பின் காரணமாக இப்பொழுது Beefஐயும் Porkஐயும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். படிப்படியாய் சுத்த சைவமாக மாறிவிடமுயல்வதாய் வாக்களித்திருக்கின்றார்... ”

நிலா சரியாக 1:30க்கு நியூயார்க் பெண்ஸ்டேஷன் வந்துவிடுவதாய் சொன்னார்.

மறுநாள் சனிக்கிழமை விடிகாலை. என்னுடைய ரயில் காலையில் 11:41. 1:39க்கு பெண்ஸ்டேஷனை அடையும். காலையில் 10 மணிக்கு கிளம்ப ஆயத்தமானால் போதும் என்றே நினைத்திருந்தேன். 11 மணிக்கு வீட்டைவிட்டு வெளியேறி ஜாக்கிங் செய்தபடியே ஓடினால் ஒரு அரைமணி நேரத்தில் இரயில்நிலையத்தினை அடைந்துவிடலாம்.

என்ன சட்டை போடலாம்...? நேற்றைய ஜீன்ஸையே அணிந்துகொண்டேன். ஜீன்ஸைத் துவைக்கத்தேவையில்லை. என் நண்பன் என் கோலத்தினைப் பார்த்து ”தயவுசெய்து இந்த ஜீன்ஸைப் போடாதே...” என்றான். அவன் சொல்லும்பொழுது என் திட்டப்படி நான் கிளம்ப ஆயத்தமான நிலையிலிருந்தேன். அப்பொழுது மணி 11.

ஹேங்கரில் தூக்குப்போட்டுத் தொங்கிக்கொண்டிருந்த சென்றவார அலுவலக உடைகளில் கொஞ்சம் சுமாரான அழுக்குச் சட்டையையும் முழுக்கால்சட்டையையும் தேடி எடுத்தேன். ஊஹூம். அதை அணியமுடியாது. இஸ்திரி கலைந்திருந்தது. கொஞ்சம் அழுக்காயும் இருந்தது.

அவசர அவசரமாய் இஸ்திரி பெட்டியை எடுத்து உடைகளின் மீது அழுக்கு இருக்கும் பகுதிகளில் கொஞ்சம் நீர்த் தெளித்து இன்னொரு துணியினால் துடைத்து கொஞ்சம் துவைத்த உடையென நம்பவைக்கப் பிரயத்தனப்பட்டு இஸ்திரியும் செய்து அணிந்து காலணிகளை அணியச்சென்றால் பயங்கர ஷாக்.

ஜீன்ஸ் அணிவதால் கேன்வாஸ்/ஸ்போர்ட்ஸ் சூ அணியத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ அலுவல் உடை. எனவே அலுவல் காலணிதான் அணியவேண்டும். காலுறை தேடிஎடுக்க எல்லா பெட்டிகளையும் உருட்ட... தூங்கிக்கொண்டிருந்த என் அறை நண்பன் 100 டிகிரி செல்ஸியஸில் பொரிக்க ஆரம்பிக்க... ஒரு வழியாய் தேடிக்கண்டுபிடித்து காலணி அணிந்து.... காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் எதாவது சாப்பிடவேண்டுமே..?

நேற்றுதான் நிலாவிற்கு அட்வைஸினேன். ”எக்காரணத்தைமுன்னிட்டும் ப்ரேக்ஃபாஸ்ட்டை நிறுத்திவிடாதே...

காலையில் வெறும் வயிற்றில் இந்த ஊர் ஜூஸ் குடிக்காதே...” வேறு வழியின்றி அதே ஆரஞ்சு ஜூஸை ஒரு தம்பளரில் ஊற்றிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த இன்னொரு நண்பனை எழுப்பி காரில் ஸ்டேஷனில் இறக்கிவிடச் சொல்ல

அவசர அவசரமாய் காரில் ஏறிப்பயணிக்கும்பொழுதான்(அப்பொழுது மணி 11:30) கவனித்தேன் காலுறைகள் இரண்டும் வெவ்வேறான நிறத்தில்...! அடக் கெரகமே...! என “ஙே” என விழித்தேன். அவசர கோலத்தில் பேக் பண்ணியதால் என் பேக் நிறைமாத கர்பிணியாகியிருந்தது.

வழிநெடுக ட்ராஃபிக்ஜாம். பச்சைவிளக்கு எரிந்துகொண்டிருந்தபொழுதும்கூட கார்கள் சாரைப்பாம்புகளாய் நீண்டிருந்தன. மணி பார்த்தேன். 11:35. என் இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிப்பதற்குப் பதிலாக ஒரு நொடிக்கு 72 முறை துடிக்க ஆரம்பித்தது. உடனே ஆழ் தவநிலைக்குச் சென்று ட்ராஃபிக் க்ளியர் ஆகி அனைவரும் அவரவர் செல்லுமிடங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று சேர இந்த அருட்பேராற்றல் அருள்புரியட்டும் என துரியாதீத நிலையில் சங்கற்பம் செய்யச் செய்ய உடனே ட்ராஃபிக் வேகமாக நகர ஆரம்பித்தது.

ஸ்டேஷனை அடையும்பொழுது 11:41. இரயில் நின்றுகொண்டு பயணிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த்து. “ஙீ...ஙீ....” என டிஜிட்டலில் துல்லியமாய் இரயில் பெட்டிகளின் கதவுகள் அடைபடும் சப்தம்.

என் இரத்த அழுத்தம் எகிற ஆரம்பித்தது. அவசர அவசரமாய் டிக்கட் இயந்திரத்தில் கடனட்டையைச் செருகினால், “insert other Credit Card….” என்ற தகவலை உமிழ்ந்தது.

என் கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன. நிலாவிற்குக் கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற இயலாத சூழல். இனி ஆண்டவனே நினைத்தாலும்கூட இரயிலினைப் பிடிக்க முடியாது என்ற நிலை....

உடனே மீண்டும் துரிய தவநிலையினில் உயிராற்றலினைச் செலுத்தி, “இதே ரயிலில் பயணிக்க வேண்டும்... ”என சங்கற்பம் செய்து கொண்டு டிக்கட் கவுண்ட்டருக்கு ஓட.... அந்தப் பெண் வேகவேகமாய் டிக்கட்டினைக் கொடுத்து என் க்ரடிட்கார்டினை ஸ்வாப் செய்து ஓகே ஆக... அவசரமாய் கையெழுத்திட்டுவிட்டு... ப்ளாட்ஃபாரத்தினை நோக்கி தட்... தட்... என ஓட.... அந்தப் பக்கம் ச்செக்பண்ண வந்துகொண்டிருந்த ஒரு அதிகாரி தன் கையிலிருந்த சாவியினால் பெட்டியைத் திறந்துவிட.... உள்ளே ஒரே பாய்ச்சலாக மின்னலென பாய.... என் செல்ஃப்போனில் மணி பார்க்க... அது 11:44 என்றது. அடுத்த நொடி இரயில் நகர ஆரம்பித்தது....

தொடரும்....









மேலே வானம்... கீழே நியூயார்க்... தேதி:
வானம்-8 நியூயார்க்-2

என் இதயப்படபடப்பு குறையவில்லை....பதட்டம் தணியவில்லை.

இரயில் பெட்டி முழுதும் வாண்டுகள் நிரம்பி வழிந்தனர். இந்த தேசத்து ஊர் வாண்டுகள் அவர்களுக்கேயுரிய குறும்புகளைச் செய்துகொண்டிருந்தனர். எனக்குள் மீண்டும் வாண்டுகளுக்கான வால் முளைத்திருக்க ஆரம்பித்திருந்தது.

குழந்தைகள் ஏன் குறும்புகள் செய்கின்றன....? குழந்தைகளை ஏன் அனைவருக்கும் பிடிக்கின்றன....? குழந்தைகளுடன் விளையாடும்பொழுது ஏன் மனம் லேசாகின்றது...? குழந்தைகளின் சிரிப்பில் மனம் லேசாவதன் மர்மம் என்ன....? பிஞ்சுக் கைகள். நம்மை பற்றுவது எதனால்...? ”என்னைக் கைவிட்டுவிடாதே...!” எனச் சொல்கின்றதோ...? ”நீ என்னைக் கைவிட்டாலும்... நான் உன்னை விடேன்...” என கெட்டியாகப் பிடித்துக்கொள்கின்றதோ...!

குழந்தையின் உயிராற்றல் திணிவு அதிகம். ஜீவகாந்தம் அதிகம். ஜீவகாந்தம் அதிகமுள்ள முகம் எப்பொழுதுமே தேஜஸாகவே இருக்கின்றதே...! ஜீவகாந்தம் குறையும்பொழுது உடலில் முதுமையின் கோடுகள்...!

பொதுவாக்வே என்னைச் சுற்றிலும் எப்பொழுதும் வாண்டுகள் பட்டாளம் உண்டு. ”வாண்டு மாமா” எனச் செல்லமாக ஒரு செல்லப்பெயர்கூட உண்டு. தெனாலிராமா கதைகள் சொல்லி சொல்லி சிரிக்கவைப்பது வழக்கம். மேலும் மனதிற்கு அந்தந்த நொடிகளில் தோன்றும் கற்பனைகளை வைத்து சுவைபட அதை ஒரு விஞ்ஞானப் புனைவாக்கி குழந்தைகளை அசர வைக்கும் வழக்கம் உண்டு. என் அருகாமை வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்தியாவில் அதிகம். அவ்வளவு அட்டாச்மெண்ட்.

நேற்றுதான் நிலா சொன்னார், இந்த ஊரில் குழந்தைகளைக் கொஞ்சக்கூடாது எனவும் சில நேரங்களில் சிறை தண்டனையில்போய் அது முடியும் எனவும் தொலைபேசியில் தொலையாடியது, “டிண்ட்டி..டிண்ட்டி.....டாய்ங்.... ஊஊஊஊ.... தென்பாண்டிச்சீமையிலே.. தேரோடும் வீதியிலே....” என நாயகன் ஸ்டைலில் என் காதில் ரீங்கரித்தது.

ஆனாலும் குழந்தைகள் என்னைப் பார்த்ததும் குபீர் குபீரென சிரிக்க ஆரம்பித்தனர். குழந்தைகள் பெரியவர்களைப் போல் பாசாங்கு பண்ணிக்கொண்டிருந்தனர். ஒரு குழந்தை இப்படிச்சொன்னது, “அடுத்தவருவது எனது நிறுத்தம்... நான் இறங்கப்போகின்றேன்...” என ஒரு 80 வயது தாத்தாவின் தொணியில் குட்டி குட்டியாய் இருந்த அக்குழந்தை சொல்லி அபிநயத்தபொழுது என்னால் சிரிப்பினை அடக்கமுடியவில்லை.

Huntingtonல் இன்னொரு இரயில் மாறவேண்டும். ஒரு காஃபியை வாங்கிக்கொண்டு அடுத்த 3 நிமிடங்களில் ரெடியான இன்னொரு இரயிலில் அமர்ந்தேன். ஏறி அமர்ந்ததும் இரயில் கிளம்பிற்று. கிளம்பியபின்தான் ஞாபகம் வந்தது, “இது New York Penn Station போகும் இரயில்தானா...?” என்ற ஐயம். ஆங்கிலத்தில் ஏதேதோ அறிவிப்புகள். ஊஹூம் துளிக்கூட எனக்கு ஆங்கிலம் புரியவில்லை. ஆங்கிலம் படிக்காமல் போனதற்குக் காரணம் பாலாஜி பதிப்பகத்தார் 30 நாட்களில் ஆங்கில பாஷை என்ற் புத்தகத்தினை இன்னும் வெளியிடவில்லை.

பயணச்சீட்டு நடத்துனர் ஒரு கறுப்பினப் பெண்மணி. அவரிடம், “ஆண்ட்டி... ஆண்ட்டி... இந்த ட்ரைய்ன் பெண் ஸ்டேஷன் போகுமா....?”ன்னு.

”ட்ரைய்ன் கெளம்புறதுக்கு முன்னாடி இதைக் கேட்றுக்கணும். இப்பக் கேட்டு என்ன ப்ரயோஜனம்...? ” என்று சொல்லிவிட்டு “ஊஹூம்” என உதடுகளைப் பிதுக்கினார்.

”ச்சே நம்ம ட்டைம்மே சரியில்லே...” என நினைக்கும்பொழுது , “This is the train to PENN STATION, The Next Station is Cold Spring Harbour… ” என்று ஆங்கிலத்தில் ஒலிவிப்பும் சிவப்பு நியான் டிஜிட்டல் LEDயில் எழுத்துக்களிலும் ஒளிவிப்பும் நடந்தது கண்டு நிம்மதியானபொழுது நிலாவிடமிருந்து ஃபோன். ”ஐயா நான் உங்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது....?”

“இதென்ன கேள்வி....? எத்தனை தமிழ் சினிமாக்கள் பார்த்திருக்கின்றோம்...! ஒரு குடும்பப்பாடலைப் பாடினால் எளிதாக் அடையாளம் கண்டு இணைந்துவிடலாமே...? ”

“என்ன பாட்டு பாட....?”

“எங்கள் வீட்டில் எல்லாம் நாளும் கார்த்திகை.... ஹூஹூஹூ... ” என நீங்கள் பாடும்பொழுது நான் எசப்பாட்டுப் பாடினால் நான் ரிஷி நீங்கள் நிலா என அடையாளம் கண்டுகொள்ளலாம்.

“இல்லை ஐயா.... நியூயார்க் பரபரப்பான ஊர்... அப்படியெல்லாம் பாட்டுப்பாடமுடியாது...”

“அச்சு முச்சு கிச்சியா....?”ன்னு Code Wordல கேளுங்க.... பதிலுக்கு நான், “கிச்சு முச்சு அச்சியா...?”ன்னு Code Wordல கேட்டா நான் ரிஷி, நீங்கள் நிலா.

”அப்டீன்னா என்னய்யா அர்த்தம்....?”

“அர்த்தம் புரிஞ்சா Assembly Languageம் Microprosessorரும் கம்ப்யூட்டரும் படிச்சோம்...? எதுல அர்த்தம் புரியலியோ... அதுவே நம்ம வாழ்க்கையா மாறிடலையா...? இதெல்லாம் ச்சின்ன சின்ன விஷயங்கள்... ”

“ஐயா... வெளக்கெண்ணெய் குடிச்சவன் மாதிரி பேந்தப் பேந்த விழிச்சா நான் தான் நிலா...”

ஒரு வழியாக நியூயார்க் பெண் ஸ்டேஷன் வந்து சேர, நிலாவிடமிருந்து மீண்டும் ஃபோன். தான் சுவாதியக்காவிடம் பேசிவிட்ட்தாயும் நேரே Subway trainஏறி South Ferryக்கு வந்துவிடும்படியும் கூறியதாய்ச் சொன்னார். தான் இப்பொழுது 33வது வீதியில் Subway 1ல் இருப்பதாய்ச் சொன்னார். நானோ ஸ்டேஷனுக்குள்ளிருக்கும் 32வது வீதி Subway 1ல் இருப்பதாய்ச் சொன்னேன். தேடோ தேடு....

விளக்கெண்ணெய் குடிச்சாமாதிரி யாராவது இருக்காங்களான்னு நான் நிலாவைத் தேட..... “இரயில் இஞ்சின் தின்ன குரங்குமாதிரி யாராச்சும் இருக்காங்களா....?”ன்னு நிலா அந்த முனையில் என்னைத் தேட.... ஊஹூம் கண்டுபிடிக்கமுடியல.

மீண்டும் ஃபோன் பண்ணி Pennsylvania Station Entranceக்கு வரும்படிச் சொன்னேன். தான் இப்பொழுது Madison Garden Squareல் இருப்பதாய் சொன்னார்.

நானும் அங்கே தான். Chase Bank முன்னாடி நிக்கிறேன் பாருங்க...

ஐயா தெரியல....

நிலா நான் இங்க இருக்கேன்...

ஒரு வழியா செல்பேசிக்கொண்டே யாரையோ தேடிக்கொண்டிருந்த ஒரு இந்திய இளைஞன் மீது எனக்கு சந்தேகம் வந்து பார்வையைப் பதிக்க...

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் சலவை செய்த நீலநிற ஜீன்ஸும் ஒரு வெள்ளைநிறத்தில் முழுக்கை சட்டையுடனும் 6 அடி உயரத்தில் அக்மார்க் தென் தமிழ் நாட்டு அடையாளமாக என்னைத் தேடிக்கொண்டிருக்க...

”நிலா.... இதோ நான்....”

மகிழ்ச்சிப் பிரவாகத்தில் ஆறடி இருந்த நிலா ஒரு எம்பு எம்பி ஏழடியாகி ஹைஃபை சொல்ல.... தெருவில் அனைவரும் எங்களை விநோதமாகப் பார்க்க ஆரம்பிக்க இடத்தைக் காலி செய்தோம்.

டிக்கட் எப்படி எடுப்பது...? எப்படி செல்வது...? எந்த இரயிலில் ஏறவேண்டும்...? எங்கே இறங்க வேண்டும்...? .நமக்கோ நம் ஊர் பாணியில் ”சாப்பாடு ஆச்சா...? ” என்பதிலிருந்து எல்லாம் விசாரிக்கவேண்டும் டிக்கட் கொடுப்பவரிடம். ஆனால் இங்கே எல்லாம் மெஷின் மயம்...!

ஒரு கவுண்ட்டரில் டிக்கட் கொடுக்க... நமக்கோ விசாரணை முக்கியம்... நானும் நிலாவும் வரிசையில் நிற்க. எனக்குள் ஒரு பகீர். ஏனெனில் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை. இப்பொழுது மணி 2. சாப்பாடு இனி எப்போ...? என்ற வலியில் வயிறு கிள்ளியது. பேக்கிலிருந்த ஓட்மீல் பார் இரண்டினை எடுத்து நிலாவுக்கு ஒன்றினைக் கொடுத்துவிட்டு சந்தடி சாக்கில் நிலாவினை வரிசையில் எனக்கு முன்னே நிற்கவைத்துவிட்டு (நமக்குத்தான் ஆங்கிலம் வராதே...! ) பின்னர் டிக்கட் எடுத்துவிட்டு ட்ரைனில் பயணித்தோம்.

ஒரு வழியாக South Ferry வந்து சேர்ந்தோம்.

ஸ்டேடன் ஐலேண்டிற்கு இங்கிருந்து ஓடம் இலவசமாக சேவை. வரிசையில் நின்றோம். ஓடம் 3 மணிக்கு இருந்தது. நிலா அருகிலிருந்த கடையில் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா...? எனக் கேட்க... நான் ஒரு பெரிய நோ சொன்னேன். இப்பொழுது ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் பின்னர் சுவாதியக்கா வீட்டில் ஒரு கட்டு கட்டமுடியாமல் போய்விடும். எனவே ஐஸ்க்ரீமிற்குத் தடாவிதித்தேன்.

ஓடத்தில் ஏறி சிறுவர்கள் அடம்பிடிப்பது போல் ஜன்னலோரமாய் அமர்ந்தோம். இரயிலில் இருப்பது போல் எதிரெதிர் இருக்கைகளில் ஜன்னலோரம். ஓடம் மெல்ல மெல்ல நகர ஆரம்பிக்க....

இளையராஜா உச்சஸ்தாயியில்...”நிலா அது வானத்து மேலே... பலானது ஓடத்து மேலே.. ஹொய்யா...ஹோய்.... அது என்னஹோய்..... ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டும்.....ட்டும்..ட்டும்...” எனத் தன் இசைப்பரிவாரங்களுடன் இசைத்துக்கொண்டிருக்க...

நிலாவும் நானும் ஃபிலிம் இல்லாத (நிலாவின் கேமராவில் பேட்டரியும் இல்லையாம்...பாவம்....!) கேமராக்களில் படங்களைச் சுட்டுக்கொண்டிருக்க... ஒரு வழியாய் Staten Island வந்து சேர்ந்தோம்.

நாங்கள் ஏற்கெனவே சுவாதியக்காவைத் தனித்தனியாகப் பார்த்திருந்த்தால் எங்களுக்கு அடையாளம் தெரியும். கூட்டம் எல்லாம் கலைந்தாயிற்று. ஆனால் வந்து அழைத்துச்செல்வதாய் உறுதியளித்த சுவாதியக்காவைக் காணவில்லை. இப்பொழுது ஓடமியங்கும் அத்துறைமுகத்தில் எங்களிருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

ஒரு காவல் அதிகாரி எங்களைச் சந்தேகப்படும்படிப் பார்க்க.... அவரிடமே சென்று, “அங்க்க்கிள்...அங்க்க்கிள்.... இந்த சுவாதியக்கா அவங்க வீட்டுக்கு எப்டிப் போகணும்....?”ன்னு கேட்பதற்கு என் மனம் முயல.....

அப்புறம் இரண்டொருமுறை கம்பீரமாய் இந்த கோடிக்கும் அந்தக் கோடிக்கும் நடக்க........”பிள்ளையாரப்பா...நான் பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டா ஒனக்கு மொட்டை போட்டுக்கறேன்....”ன்னு வேண்டுவோமே... அது மாதிரி வேண்டிக்கறதா ஆச்சு. அப்றம் ஒரு வழியா சுவாதியக்கா வந்துட்டாங்க.....!

தொடரும்.....





மேலே வானம்... கீழே நியூயார்க்... தேதி:
வானம்-8 நியூயார்க்-3

நேரே தன் கார் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். உள்ளிருந்து ஒரு வாண்டு தன் தலையை நீட்டியது. “ஆர்ரா இவிங்க......?” என்று ஒரு முறைப்பு.

சுவாதியக்காவின் இளையமகன் அச்சுதானந்தன். அச்சு...அச்சு...என்று செல்லமாக அழைப்பதினால் அச்சுதானந்தன் என்ற பெயரே அனைவருக்கும் மறந்துவிட்டது. நம் ஊர் மண்பானை கருப்பு நிற மூடியைத் தலையில் கவிழ்த்ததுபோன்ற சிகையலங்காரத்திலிருந்தார். அதுதான் ஃபேஷனாம்...!!!!

என்னை அடையாளம் கண்டுகொள்ள நேரமானது. சென்றமுறை சிவசிவா ஐயா அவர்களின் வீட்டிற்குச் சென்றபொழுது, எப்பொழுதும் குழந்தைகளிடம் கேட்கும் வழக்கமான “தம்பி உன்ன்க்க்க்கு என்ன பிடிக்க்க்கும்...?” என்ற கேள்வியினைக் கேட்க....

“அங்க்க்க்கிள்... அங்க்க்க்கிள்... என்க்க்க்கு என்ன்ன்க்க்கு என்ன்க்க்கு ச்ச்ச்சளி பிடிக்கும்....!!! ஹாஹ்ஹ்ஹ்ஹா...!” என்று இரு கைகளையும் கொட்டிச் சிரித்துவிட்டு....ஒரு ஆழமான ஊடுருவிய பார்வை.

நான் “ஙே” என விழிக்க...

”அங்க்க்க்கிள்....அங்க்க்க்கிள்.... என்க்க்க்க்கு கதை பிடிக்க்க்க்க்க்கும்....”

“குட்.... என்ன கதை பிடிக்கும்....? பாட்டி வடைசுட்ட கதை சொல்லட்டுமா...?”

“நோப்....”

“அப்றம்.....?”

“என்ன்க்க்க்கு....என்க்க்க்கு..... புலிக்கதை பிடிக்கும்....!!! ஹாஹ்ஹ்ஹா......” என இரு கைகளையும் கொட்டிச் சிரித்துவிட்டு, “புலிக்கதை சொன்னால்தான் ஆயிற்று.... இல்லேன்னா நடக்றதே வேற.....” என்று மிரட்டிய அதே வாண்டு...! இன்று என்னென்ன செய்யப்போகின்றானோ...? அடி மனதினில் பயம் உருட்டியது....!

இப்பொழுது வளர்ந்திருந்தான். இந்த 9 மாதத்தில் அசாத்திய வளர்ச்சி. தெளிவாகப் பேசுகின்றான்.

சுவாதியக்கா, கார் ஓட்டுநர் இருக்கையிலிருந்த தன் கடைத் தம்பியை அறிமுகம் செய்து வைத்தார். சுவாதியக்காவும் அச்சுவும் நானும் பின் சீட்டில் அமர, நிலா முன் இருக்கையிலமர கார் மெல்ல மெல்ல வேகம் பிடித்து மரம் செடி கொடிகளைப் பின்னோக்கித் தள்ளி முன்னோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது.

அச்சு சடேரென இருக்கையிலிருந்து எழ, “அதோ அந்த போலீஸ் அங்க்கிள்ட்ட உன்னைப் பிடிச்சிக் கொடுத்துடுவேன்... ஒழுங்கா சேட்டை பண்ணாம இரு....” என சுவாதியக்கா பயமுறுத்தினார்.

”இந்த தேசத்திற்கு வந்தும் நம் ஊரில் குழந்தைகளை பயமுறுத்தும் அதே போலீஸ்...பூச்சாண்டி...தானா....?” என்று கேட்டேன்.

“சும்மா இருங்க ரிஷி.... யாருக்காச்சும் பசங்க பயப்படணும்.. இல்லேன்னா இவன்களை எப்டி கட்டி மேய்க்கறது....?”

“நோ...நோ... ச்சின்னக் குழந்தைங்கன்னா சேட்டைகள் செய்யத்தான் செய்வார்கள்.... அப்படித்தான் இருக்கவேண்டும்....உங்கள் குழந்தைகள் ரொம்பவும் சாதுவாக இருக்கின்றனர். குறும்புகள் ரொம்ப ரொம்ப குறைவு...”

“சின்னப்பசங்கன்னா சேட்டைகள் செய்யணுமா....ஏன்...?” – சுவாதி

“குழந்தைகளிடம் நிறைய நிலையாற்றல்(Potential Energy) பொதிந்து கிடக்கின்றது. அது இயக்க ஆற்றலாக ( Kinetic Energy) தொடர்ந்து உருமாற்றம் அடைந்துகொண்டேயிருக்கின்றது. உடல் வளர்ச்சியானது நிற்கும்வரை இந்த நிகழ்வுகள் நிகழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குழந்தைகளிடம் இந்த இயக்க ஆற்றல் மாற்றம் மிகவும் துரிதமாக நடைபெறும்பொழுது அதிக குறும்புகள் பண்ணுவர். ஆற்றல் சமநிலையடையும் பொழுது அவர்கள் ஓரளவு நல்ல பக்குவமடைந்திருப்பர். இதுதான் நியதி. மேலும் ஒரு குழந்தையிடத்தில் தசாவதாரங்களையும் நாம் காணலாம். நீச்சலடிப்பது தவழ்வது பறக்க முயல்வது நடப்பது என அத்தனையும் நாம் காணலாம். இவைகளெல்லாம் பரிணாம வளர்ச்சியின் இயல்புகள் நம் ஜீன்களில் தொடர்ந்து த்கவல்களாகக் கட்த்தப்படுவதினாலேயே....!”

”என்னவோப்பா.... இந்த கெரகமெல்லாம் நமக்குத் தெரியாது....!”

நடுநடுவே நிலாவின் கவிதைகளைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டே வந்தார். நிலாவிற்கு நிறைய இரசிகர்கள். குறிப்பாக இரசிகைகள் அதிகம். அவருடைய கவிதைகள் மிகவும் பிரபல்யம்.

கார் இப்பொழுது வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டது. வீட்டிற்குள் நுழைந்தோம்....!!!

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிர்வும் ஒரு மணமும் உண்டு. வீட்டினுள் நுழைந்ததும் ஒரு பாரம்பர்ய தமிழ்வீட்டில் நுழைந்த ஆனந்தம். அதே அதிர்வுகள், அதே மணம் என்னால் உணர முடிந்தது. நீண்ட வருடங்களுக்குப் பின் ஒரு வீட்டினுள்... அதுவும் ஒரு தமிழ் வீட்டினுள்... நுழைந்த பேரானந்தம்....!

ஒரு பெரிய LCD திரைகொண்ட தொலைக்காட்சிப் பெட்டியிருந்தது. அங்கே சன்டிவியில் விஜயும் ஜோதிகாவும் “குஷி”யாக சண்டைபோட்டுக்கொண்டிருந்தனர்.

சுவாதியக்கா தங்களது அம்மா அவர்களை அறிமுகம் செய்துவைத்தார். மிகவும் எளிமையாக இருந்தார். வாழ்க்கை அனுபவங்கள் முகத்தில் தென்பட்டன. பெரியவர். கரம் கூப்பி வணக்கம் செய்தோம்.

எங்கோ வெளியே கிளம்பிக்கொண்டிருந்த இன்னொரு தம்பியை அறிமுகம் செய்துவைத்தார். அவர் ஒரு வாலிபால் விளையாட்டு வீரர்.

சிறிது நேரத்தில் சுவாதியக்கா அவர்களின் பிராணநாதன்(சென்றமுறை சிவசிவா ஐயா அவர்களின் வீட்டிற்குச்சென்றபொழுது இப்படித்தான் அறிமுகப்படுத்தினார்...) சிநேகன் வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்.


இந்தப் பூனையும் பால் குடிக்குமா...? என்ற ஒரு அப்பாவியான தோற்றம். கடின உழைப்பாளி, உழைப்பைத் தவிர வேறெதுவும் அறியா அப்பாவி. இரவுப்பணிமுடிந்து திரும்பியபின் நாளை(5-ஜூலை-2009, ஞாயிறு) எங்களுடன் நேரம் செலவழிப்பதாய்ச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

நானும் நிலாவும் இலக்கியத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தோம். ஜெயமோகனின் தற்போதைய விமர்சன்ங்ளும் சாரு நிவேதிதாவின் பதிலுரைகளும் பேசினோம். ஜெயகாந்தன், லா.ச.ரா, கி.ரா., மேலாண்மை பொன்னுச்சாமி என சகலரையும் சுவாசித்தோம்.

நிலா தன்னுடைய இரண்டு கவிதைத் தொகுப்புக்களையும் அகம் புறம் என்ற வண்ணதாசனின் புத்தகத்தையும் பரிசளித்தார். மு.மேத்தா ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் என்ற கவிதைத் தொகுப்பிற்கு அணிந்துரை அளித்திருந்தார். உடனே எங்கள் பேச்சு மு.மேத்தாவின் பக்கம் திரும்பியது.

அவரது “கண்ணீர்ப்பூக்கள்” என்ற கவிதைத் தொகுதியிலிருந்த என் கல்லூரிக் காலங்களில் மிகவும் பிரபல்யமாகியிருந்த “தேசப்பிதாவிற்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி”யை என் நினைவகத்திலிருந்து நிலாவிடம் பரிமாறினேன்.

மேத்தாவை நேரடியாகச் சந்திக்கவில்லை. ஆயினும் நாங்கள் ஓரிருமுறை தொலைபேசியிருக்கின்றோம். என்னுடைய வள்ளுவம் சார்ந்த கருத்துக்களை அவர் பெரிதும் வரவேற்றிருக்கின்றார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணனை நிலா, முனைவர் இரவா மற்றும் நம் சில நண்பர்கள் பாண்டிச்சேரியில் சந்தித்ததாய்ச் சொன்னார். ”இவர் நம்ம ஊருக்கருகேதான். கோவில்பட்டிக்கு அருகே செவல்பட்டி...”

“ஆம் நிலா. இவர் ஒரு நிலச்சுவான்தார் வீட்டில் பிறந்த செல்லப்பிள்ளை. விவசாயக் குடும்பம். இவரது கோபல்லபுரத்து மக்கள் என்ற கதை விகடனில் தொடராக வெளிவந்த பொழுது படித்திருக்கின்றேன். பின்னர் சாகத்திய அகாடமி விருது வாங்கியது

சா.கந்தசாமியின் சாயாவனம் என்ற புதினமும் அந்தக்கால கட்ட்த்தில் இலக்கிய உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரபஞ்சனின் எழுத்துக்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். இவரைப் பலமுறை மகுடம் பத்திரிகை அலுவலகத்தில் சந்தித்திருக்கின்றேன். அன்று மணிரத்னத்தின் “ரோஜா” என்ற படம் வெளிவந்து அனைத்து ஊடகமும் வானளாவப் புகழ்ந்து எழுதிக்கொண்டிருந்தன. தற்செயலாய் மகுடம் பத்திரிகை அலுவலகம் சென்றபொழுது பிரபஞ்சனும் சுப.வீரபாண்டியனும் வருகைபுரிந்திருந்தனர். ரோஜா படத்தினை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்து விமர்சனம் எழுதினர்.

பிரபஞ்சன் பாண்டிச்சேரியில் ஒரு செல்வந்தர் வீட்டில் பிறந்து எழுத்தையே சுவாசமாய் கொண்டு ஏழ்மையில் சிக்குண்டுவிட்டார். அவர், “தம்பி, எழுத்தில் பொருள் சேர்க்க இயலாது. எழுத்தே வாழ்க்கை என முடிவெடுப்பது ஏறக்குறைய தற்கொலைக்குச் சம்ம். ” என்று எனக்கு அறிவுரை வழங்கினார். அப்பொழுது சாகித்திய அகாடமி விருது வாங்கிய அவரது “வானம் வசப்படும்” எனற புதினம் வெளிவராத காலகட்டம். அதனால் மீண்டும் IIT M.Tech கனவுக்ளுக்குத் தள்ளப்பட்டேன். பிரபஞ்சனை என்னால் மறக்க இயலாது. ”

“சுப்ரபாரதி மணியன் தெரியுமா...? அவரது எழுத்துக்களை நீங்கள் வாசித்திருக்கின்றீர்களா....?”

“ஓ... தெரியுமே...! அவரும் ஜெயமோகன் போன்றே தொலைபேசித்துறையில் திருப்பூரில் பணிபுரிகின்றார். அவர்களது கனவு என்ற பத்திரிகையும் SAVE என்ற அமைப்பும் இணைந்து நடத்திய குழந்தைத் தொழிலாளர்கள் விழிப்புணர்வு சிறுகதைப் போட்டியில் என்னுடைய “பிஞ்சு” என்ற சிறுகதையும் 16 கதைகளுள் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

நூல் வெளியீட்டுவிழாவிற்கு அனைத்து எழுத்தாளர்களையும் அழைத்திருந்தனர். அப்பொழுதுதான் சுப்ரபாரதிமணியன், சா.கந்தசாமி, துனுஷ்கோடி ராமசாமி, தோப்பில் முகமது மீரான், மேலாண்மை பொன்னுச்சாமி(இவர் ஏற்கெனவே என் நண்பர்.) மோகமுள் படத்தினை இயக்கிய இயக்குநர் ஞானராஜசேகரன் என அனைவரையும் சந்தித்து ஒரு பட்டரையாக இரண்டு நாட்கள் அந்த நிகழ்வு நடந்தேறியது. அவை மிகவும் இனிமையான நாட்கள்.

ஹைதராபாத்தினைச் சேர்ந்த சாந்தா தத் என்ற எழுத்தாளர் என் எழுத்துக்களில் ஜீவன் இருப்பதாயும் பார்க்கும் எதையுமே உணர்ச்சிகளாய் அப்படியே உணர்வதாயும் வாழ்த்தினார். இவர் அப்பொழுதைய கல்கி இதழ்களில நட்சத்திர எழுத்தாளர்.”

கூத்துப்பட்டறை பிரளயன் பக்கம் எங்கள் பேச்சுத் திரும்பியது. ”வெண்மணி” என்ற ஆவணப் பட இயக்குனர் பாலாஜி கிருஷ்ணகுமார் மீது திரும்பியது. இவர்கள் அனைவருமே எனது தமுஎச நண்பர்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினில் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்தபொழுதுதான் இத்தனை நண்பர்கள்....

மேலாண்மை பொன்னுச்சாமி 1989ல் கல்கியில் “அரும்பு” என்ற சிறுகதைக்கான முதல் பரிசினைப் பெற்றிருந்தார். எங்கள் கல்லூரியில் சமூக நற்பணி மன்றத்திற்கு நான்தான் பொறுப்பு. மேலாண்மையை அழைத்து பலமுறை உரையாற்றப் பணித்திருக்கின்றோம். நான் அவரது பல நிகழ்ச்சிகளுக்குத் தலைமைதாங்கியிருக்கின்றேன்.... இன்று அவர் பிரமாண்டமாய் வளர்ந்து அரசமரமாய் நின்று சாகத்தியமும் சாதித்துவிட்டார்...

சிவகாசிக்கருகே மேலாண்மறை நாடு என்ற கிராமம். ஏழ்மையான விவசாயி. வருமானத்திற்கு ஒரு பெட்டிக்கடை. இவரது வீட்டிற்குச் சென்றிருக்கின்றேன். எங்களூருக்கருகேதான்.

ஒரு சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு மணிக்கணக்கில் இலக்கியங்களைப் பேசித்திரிந்துகொண்டிருப்போம்... பாலாஜி கிருஷ்ணகுமார் சாத்தூரில் பாண்டியன் கிராம வங்கியில் பணியிலிருந்தார், பின்ன்ர் பணியை இராஜினாமா செய்துவிட்டு முழுநேர இலக்கியத்திற்குத் தாவிவிட்டார். இவர் இயக்கிய ”வெண்மணி” என்ற ஆவணப்படம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

தமுஎச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ) சார்பில் எத்தனை ஊரில் கலைஇரவு நட்த்தியிருக்கின்றோம்...? எத்தனை பட்டிமன்றங்கள்...? ம்ம்ம் அது ஒரு கனாக்காலம்.... இங்கு பெற்ற பயிற்சியே என் நாடகங்கள் பல்கலைகழக அளவில் முதல் பரிசினையும் பின்னர் சென்னைத் தொலைக்காட்சியில் தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சியில் (1995) குழந்தைகளை வைத்து இயக்கிய, “ஒரு டைரக்டர் படம் எடுக்கிறார்...”, “ஒன் மோர் டாக்டர்....” ஆகிய இரு நாடகங்களும் பெரும் வரவேற்பினையும் சென்னை வானொலியில் இளையபாரதத்தில் நிலாமுற்றம் நிகழ்ச்சியில் “வாழ்க்கைக்கு வள்ளுவம்” என்ற விவாத அரங்கிலும் பங்கேற்க பெரும் காரணம். மேலும் நம் குழுமத்தில் விழியனின் தந்தை மதுரையில் ஒரு அறிவியல் முகாமில் நண்பரானாதாய் நினைவு....

“அப்றம் ஏன் நீங்க இலக்கியத்தை தொடரவே இல்லை ஐயா.....?”

“என்னவோ தெரியவில்லை நிலா.... எப்பொழுதாவது என் சக நண்பர்களை நினைத்தால் அந்த நினைவு வாட்டும். இலக்கியத்தில் இன்று பேர் சொல்லிக்கொள்ளும்படியாய்த் திகழும் சோ.தர்மனும் நானும் சமகாலத்தில் இலக்கியத்தில் நுழைந்தவர்கள். குமுதம் நட்த்திய சிறுகதைப்போட்டியில் பங்கேற்க செங்கல்பட்டு சென்றபொழுது சோ,தர்மன் பரிச்சயமானார்.

அதன்பின்னர் ”இலக்கியவீதி” இனியவனின் நட்பு... எழுத்தாளர் திலகவதி அவர்களின் அறிமுகம்...எழுத்தாளர் சு.சமுத்திரம், வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம், நாகேஷ் என நட்பு வட்டம் நீண்டது.... சில இரவுகளில் தூக்கம் வராது... எதையோ இழந்துவிட்டோம்....என எண்ணி கண்ணீர்த் துளிகள் அவ்வப்பொழுது ஜனிக்கும்....”

”ஐயா... உங்களுக்கு ரிஷி என்று எப்படிப் பெயர் வந்தது....உங்களின் உண்மையான பெயர் என்ன....?”

“என்னுடைய இயற்பெயர் இரவீந்திரநாத் தாகூர். இலக்கியத்திற்காக நோபெல் பரிசு வாங்கிய மறைந்த வங்க எழுத்தாளரின் நினைவாக எங்கள் பெரியப்பா(அப்பாவின் அண்ணா) வைத்த பெயர் அது. (நல்லவேளை அவர் மட்டும் எனக்கு இப்படியொரு பெயர் வைக்காதிருந்தால் என் பெயர் குலவழக்கப்படி ஒரு ராஜகோபாலன் என்றோ அல்லது கோபாலகிருஷ்ணன் என்றோ அல்லது நாராயணன் என்றோ அமைந்திருக்கும்.)

அவரது ஆசை நானும் தாகூர் போல் இலக்கியத்தில் நோபெல் பரிசு வாங்கவேண்டும் என ஆசைப்பட்டார். மிகவும் பேராசை. என்னுடைய எழுத்துக்களை மிகவும் பாராட்டுவார். ஆனால் எனக்குத்தான் தெரியும் எனக்கு எழுதவே வராது என்ற விடயஞானம்.

இந்தப் பெயர், எங்கள் கிராமபாடசாலையில் என்னை சேர்த்தபொழுது அங்கிருந்த உபாத்தியாயர் நம் ஊர் சம்பிரதாய மரபின்படி தாகூரை நீக்கிவிட்டு “இரவீந்திரன் ” என சுருக்கினார். பின்னர் நம்பிக்கை ராமா நம்பிக்கை குழுமத்தில் சேர விடுத்திருந்த அழைப்பினை ஏற்று ஜிமெயிலி ஒரு கணக்கினைத் துவக்க... என் பெயரில் ஏற்கெனவே கணக்கு இருப்பதாய்த் தகவலை உமிழ நானும் பல்வேறு நிகழ்தகவினில் முயற்சித்து இறுதியில் ரிஷிரவீந்திரன் ஆனேன்.... நீங்கள் நினைப்பது போல் நான் ஆன்மீகவாதியல்ல. சாதாரணமாய் கேள்விகளைக் கேட்கும் விஞ்ஞான மனோபாவம் நிறைந்த ஒரு சிறுவனே....! ”

“உங்கள் ஊர் எது ஐயா.....உங்கள் குடும்பம்...உங்கள் சிறுபிராயம்...?”

“என்ன சொல்ல....? எந்த ஊர் என இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. நான் பிறந்தது விருதுநகரின் நகராட்சி மருத்துவமனையில். அப்பாவின் ஊர் விருதுநகர்க்கருகே கூத்திப்பாறை என்ற ஒரு கிராமம். அம்மா அப்பா இருவருமே ஆசிரியர்கள்.

ஆசிரியரின் மகன் மக்கு என்பது போல் எனக்கு பாடங்கள் சுத்தமாக மண்டையில் ஏறவே இல்லை. மிகவும் நோஞ்சானாக இருந்திருக்கின்றேனாம். எங்கள் அம்மாவின் மூத்த சகோதரி என்னை இரண்டு மாதக் குழந்தையாக இருந்தபொழுதே தத்து எடுத்துச் சென்றுவிட்டனர். எனவே எனக்கு என் பெற்றொர்களை நான் எட்டாம் வகுப்புப்படிக்குவரை அவ்வளவாகத்தெரியாது.... அம்மாவை சித்தி என்றே நினைத்திருந்தேன்.

எங்கள் பெரியப்பா ஒரு தீவிர வைஷ்ணவர். இவர்களிருவரும் உறவுமுறைகளில்தான் பெரியம்மா-பெரியப்பாவே தவிர... வயதினில் மிகப் பெரியவர்கள்.... எங்கள் அம்மாவையே வளர்த்தவர்கள் இவர்கள்தானாம்.

பெரியப்பா ஒரு சுதந்திரப்போராட்ட வீரர். காந்தியடிகளின் சீடர். விநோபாவும் இவரும் நெருங்கிய நண்பர்கள். விநோபாவின் பூதான் இயக்கத்தில் தன்னை தீவிரமாக இணைத்துக்கொண்டு தன்னுடைய எல்லா நிலங்களையும் பூதான் இயக்கத்திற்குத் தாரை வார்த்துவிட்டார். விநோபா எங்கள் வீட்டிற்கு வருகை புரிந்திருக்கின்றாராம்.

வீட்டு நூலகத்தில் காந்தியடிகளின் புத்தகங்களும் விநோபாவின் புத்தகங்களுமே நிரம்பியிருக்கும். வ.உ.சி, பாரதியும் உண்டு. அவரை மையமாக வைத்து எழுதியதுதான் முத்தமிழில் பரிசு பெற்ற “லயம்” என்ற இலக்கியச் சிறுகதை.

அங்கே வாழ்க்கை எனக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. பால்யகாலம் மிகவும் இனிமையானவை. நிறைய குறும்புகள். சனிக்கிழமை, ஏகாதசிதோறும் விரதங்கள்... தினமும் கிருஷ்ணன் கோவிலில் ஆஜராகிவிடுவார். அந்தக் கோயிலை நிர்வகித்தார். அவர் ஒரு யோகி. பிரம்மச்சரியம் கடைபிடித்த தம்பதியர்.

”ஓ அதனால்தானோ உங்களுக்கு யோகா இளம் பிராயத்திலேயே கைகூடியிருக்கின்றது......? ”

அவர் ஒரு யோகிதான். ஆனால் நான் வளரும் காலங்களில் அவர் யோகா செய்வதை முற்றிலும் நிறுத்தியிருந்தார். ஆனால் தவம் மட்டும் அவ்வப்பொழுது செய்வார். நான் யோகாவிற்கு வந்த கதை மக்கு மாணவன் புத்திசாலியாய் மாறுவது எப்படி...? என்ற ஆராய்ச்சியில் இறங்கி என்னையறியாமலேயே யோகாவில் தடம் பதிக்கக் காரணமாயிற்று. குறிப்பாக விவேகாநந்தர்.

சொல்லப்போனால் நான் யோகாவும் தவமும் கற்றுக்கொண்ட்து அவரிடத்தில் அல்ல. ஆனால் மிகவும் சிறு வயதிலேயே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கைகூடிவந்தது. கோபால்ஜி என்ற சுவாமிஜி, ராமகிருஷ்ண மடம், விவேகாநந்தா கேந்திரம், சுவாமி கமலானந்தா, ஸஹஜானந்தா.... இறுதியில் வேதாத்திரி மகிரிஷி... இவரிடம் மட்டுமே என் அனைத்து வினாக்களுக்கும் விடை அதுவும் நான் படித்த பெளதிகத்திலேயே கிடைத்தது....”

“சரி நிலா... நீங்கள் எங்கே....?”

“ஐயா நான் தூத்துக்குடிக்கருகே சாயர்புரம் என்ற கிராமம். B.Sc Computer Science தூத்துக்குடியிலிருக்கும் காமராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு MCA சத்யபாமா பல்கலையில் முடித்தேன். உங்களுக்கு ஒன்று தெரியுமா....?” என்று கேட்டுவிட்டு கண்களை உருட்டி ஆச்சர்யமாகப் பார்த்தார்.

நானும் “என்ன....?” என்பதினைப்போல் ஆர்வமாய் இருந்தேன். நான் இப்பொழுது நுனி நாற்காலிக்கு நகர்ந்திருந்தேன்.

“நான் படிக்கும் காலத்தில் தமிழில் மிகவும் பின் தங்கியிருந்தேன். தமிழில்தான் நான் தோல்வியடைந்தேன்...!”

எனக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

“உங்களின் கவிதைகளைப் படித்தபொழுது நான் உங்களை தமிழில் இன்னொரு வைரமுத்து என்றல்லவா நினைத்திருந்தேன்...?”

“பயிற்சியினாலும் வாசிப்பினாலும் பின்னர் எளிதாகிப்போனது....”

சுவாதியக்கா, “ஜூஸ் சாப்பிடறீங்களா.....?” என்றார்.

மணி பார்த்தேன். கடிகாரத்தில் இரு முட்களுமே ஏறக்குறைய நான்கினை நோக்கி முத்தமிடமுயற்சித்துக்கொண்டிருந்தன....

“ஜூஸ் வேண்டாம்” என்றோம். மனதிற்குள் “எப்போ சுவாதியக்கா சாப்புடு..ன்னு ஒரு வார்த்தை சொல்லுவீங்க....?”ன்னு கேட்டுட்ருந்தோம்.

ஒரு வழியா சுவாதிக்கா சாப்பிடக்கூப்பிட்ட அடுத்த நொடியில் சரேலென டைனிங் டேபிளிக்குக் குட்டிக் கரணம் போட்டு சென்றமர்ந்தோம்.

தொடரும்.....









மேலே வானம்.... கீழே நியூயார்க்....
வானம்-8. நியூயார்க்-4

நான் ஏற்கெனவே சுவாதியக்காவிடம் சொல்லியிருந்தேன். எனக்கெனத் தனியாக சிறப்பாக எதுவும் சமைக்கவேண்டாம். சாதமும் மோரும் ஒரு ஊறுகாய்த் துண்டும் போதும் என்றிருந்தேன்.

சுவாதியக்காவின் யூகேஜி படிக்கும் பெரிய பையன் அஸ்வத்தாமன் மாடியிலிருந்து கீழே வர அச்சு அவனை எனக்கு அறிமுகம் செய்துவைத்தான். அச்சு குட்டிக்கரணம் பாய்ந்து காட்டினான்.

டைனிங் டேபிளின் மீது சாதத் தட்டும் கறி வகைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு தட்டில் குழம்பு ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. எனவே எனக்குள் ஐயம். எது சைவம் ..? என வினவினேன். குழம்பு ஊற்றியது அசைவம் என்றார். அதற்கு மட்டன் என பெயர் சொன்னார்.

எனக்குத் தனியாக பருப்பும் கீரையும் கலந்த கடைசலும் ஒரு கோப்பையில் ரசமும் இன்னொரு கோப்பையில் முட்டைக்கோஸினை பால் கலந்து விநோதமாக செய்யப்பட்ட ஒரு கறியும் பீன்ஸ் பொரியலும் வைக்கப்பட்டிருந்தன. சுவாதியக்கா உணவுப் பொருட்களை ஒவ்வொன்றாய் சுட்டிக்காட்டி, இது சைவம்... இது சைவம்... இது சைவம்... எனச் சொல்லிக்கொண்டிருந்தார். ரசம் சைவம் என்றார்.

குடிதண்ணீர் வைக்கப்படவில்லை. அதனால் நான் நீர் வேண்டும் என்ற தொணியில் , “தண்ணீர்....?” என்றேன்.

“அதுவும் சைவம் தான்....” என்றாரே பார்க்கலாம்...!

எனக்குள், “இவருக்கு எப்படி நம் விருப்பம் தெரியும்....? ஒரு வேளை குழுமத்தில் என்றோ பதித்த கருத்துக்களை யானை மாதிரி நினைவில் வைத்திருப்பாரோ....?” என்ற ஒரு எண்ணம் ஓடியது.

இந்த தேசத்திற்கு வந்தபின் பிட்சாவும், பர்கரும், டூநட்ஸும், பரிட்டோவுமாய் உணவுப்பழக்கங்கள் மாறிவிட்டிருந்தன். நாக்கு செத்து, நம் ஊர் சாதமும், சாம்பார், பருப்பு, ரசம், மோர், ஊறுகாயும் கிடைக்கும் நாள் எந்நாளோ... அந்நாளே வாழ்வின் பொன்னாள்....! என எண்ணிக்கொண்டிருந்த நாக்கிற்கு நம் ஊர் உணவு கிடைத்தால்....?

வெறும் ரசம்கூட அமிர்தமாய் இருந்தது...! அந்த ருசிக்குக் காரணம் என்னவாக இருக்கும்...? மசாலாக்களின் சரியான கலவையா...? அல்ல... அல்ல.... அதற்கும் மேலே... சுவாதியக்கா சமையலில் அன்பினைக் கலந்து சமைத்திருந்தார். அதில் தாயுள்ளம் தெரிந்தது.

அசைவம் சமைத்தது சிநேகன். அவர் தந்தையானவர் என்று மட்டுமே தெரிந்திருந்த நாங்கள், நிலாவிற்காக அசைவம் சமைத்ததை எண்ணி சிநேகன் ஒரு தாயுமானவன் என்பதை அறிந்து மகிழ்ந்தோம்.

சாப்பிடுவதையே தவமாகச் செய்துகொண்டிருந்தேன். சாப்பிட்டுக்கொண்டே எங்கள் பேச்சு நகர்ந்தது.

“நான் எழுதுவதெல்லாம் கவிதையே இல்லை ஐயா... சமீபத்தில் சிற்றிதழ்கள் பரிச்சயம் ஆனபின்னர் ஒரு கவிதையைப் படித்து மனம் கிறுகிறுத்துப்போனேன்.... எழுதிய கவிஞருக்கு தொலைபேசினேன். அப்பொழுது அக்கவிஞர் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்... அவரிடம் இப்படியொரு வீர்யமான கவிதையா...? என அதிசயத்து விக்கித்துப் போனேன்.... நான் எழுதுவது வீண் என்ற முடிவிற்கு வந்தேன் ஐயா....”

“எந்த ஒரு இலக்கணத்திலும் சிக்கிக்கொள்ளவேண்டாம். எது இதயத்தினாழத்திலிருந்து வருகின்றதோ... அதுவே இலக்கியம். ” என்றேன்.

தமிழினி அவர்களிடமிருந்து சுவாதியக்காவிற்கு தொலைபேசி. நிலாவிடம் பேசிக்கொண்டிருந்தார். அவ்வமயம் வெளியூர்ப் பயணத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாயும் தான் மறுநாள் காலை (5-ஜூலை-2009, ஞாயிறு) வந்து சந்திப்பதாயும் உறுதியளித்தார். என்னிடம் அதிக பரிச்சயம் இல்லாவிடினும் என்னிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசினார்.

சுவாதியக்காவின் இரு பையன்களும் செய்யும் குறும்புகளை (சுவாதியக்காவே) குறிப்பிட்டு, ”இவர்கள் மட்டும் இலங்கையில் இருந்திட்டால் சிங்கள இராணுவம் பக்கத்திலாவது எட்டிப்பார்த்திருக்குமா....?” என்று கூறியது, புலியை முறத்தினால் விரட்டிய பண்டை தமிழ்மகளின் செயலினையும், இளையமகனை போருக்கு அனுப்பிய பண்டைய வீரத்தாயின் செயலினையும் நினைவு படுத்தியது.

சிறிது நேரம் உரையாடிவிட்டு பின்னர் உலா செல்ல ஆயத்தமானோம். இரு வாண்டுகளையும் ஒரு சக்கர தள்ளுவண்டியில் உட்கார வைத்து சுவாதியக்கா தள்ளிக்கொண்டு வந்தார். எனக்குள் ஒரே ஆச்சர்யம். ஏனெனில் இருவாண்டுகளுமே நன்கு ஓடும் திறன் கொண்டவர்கள். நிலைமை அப்படியிருக்க அவர்களை நடக்கப் பணிக்காமல் சிறு குழந்தைகளைப் போல் ஏன் தள்ளுவண்டியில் அழைத்துச் செல்லவேண்டும்...?

இறுதியில் என் ஐயத்தினை கேட்டேவிட்டேன்.

”போங்க ரிஷி..... இவன்களை நடக்கவைத்து அழைத்துச் சென்றால் சாலையில் ட்ராஃபிக் பாதிக்கும்.... அவ்வளவு சேட்டைகள்.... !” என்றார்.

எனக்கென்னவோ இரு வாண்டுகளுமே மிகவும் அமைதியாகவே காணப்பட்டனர்.

ஒவ்வொன்றினையும் விவரணையாகச் சொல்லிக்கொண்டே வந்தார். ”நாம் இப்பொழுது, Snug Harbour என்ற Cultural Centreன் பின்புறம் செல்கின்றோம்... இந்த முனையில் இருக்கும் இந்த வீடு ---- மில்லியன் விலை. விலைக்கு வந்திருக்கின்றது.... இங்கிருக்கும் ஒவ்வொரு வீடுகளும் நூறாண்டுகளை விழுங்கி நிற்கின்றது...” என்றார்.

”அட... இன்னும் வீடு அப்படியே இன்று கட்டியது போன்று புதிதாக இருக்கின்றதே....” நிலா மிகவும் அதிசயத்தார்.

”எலேய் இதாண்டா மேண்டில்....”

“இதென்னண்ணே செய்யும்....? ”

“இதாண்டா பளிச்...னனு எரியும்...”

“போங்கண்ணே..... இதெப்டிண்ணே பளிச்...ன்னு எரியும்....?”ன்னு சொல்லி அதைப் பிடுங்கி எரிந்துவிட்டு, “நீங்க பொய் சொல்றீங்கண்ணே....” என செந்திலும் கவுண்டமணியும் காமடியடித்த வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது....

உரையாடல்கள் தொடர்ந்தன.

“ஆம் நிலா.... இங்கே வீடுகள் வாங்கும்பொழுதே முகப்பினை மாற்றக்கூடாது.... பழைய அமைப்பினை மாற்றக்கூடாது...என ஏகப்பட்ட ஒப்பந்த அறிக்கைகள்.... ” என்றார் சுவாதியக்கா....

”ஏன் அப்படி....?” நிலா.

“சரித்திரங்களைக் கட்டிக் காக்கவேண்டும் என்ற அவா.....”

“நிஜமே... இந்த தேசமே சமீபத்தில்தானே உருவானது... எனவே சரித்திரங்கள் குறைவாகத்தானிருக்கும்....எனவே அவர்களின் எண்ணம் நியாயமானதே....” என்று கூறிவிட்டு, “கொலம்பஸ் இங்கு வந்தபொழுது இந்த மண் எப்படி இருந்தது...? இங்கே இப்பொழுது இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் யாவர்...? பின்னர் எப்படி இந்த தேசம் முன்னேறியது...? முதன் முதலில் டாலர்களே இல்லாதபொழுது எப்படி இவர்களின் பரிமாற்றம் நடந்திருக்கும்....? இந்த பிரமாண்டசாலைகள் அப்பொழுதே அவர்களால் எப்படி தீர்க்கதரிசனமாக படைக்க முடிந்தது....? அப்படியானால் நம் தேசம் எவ்வளவு பழம்பெரும் தேசம்...? எத்தனை எத்தனை சரித்திரங்கள் நமக்கு இருக்கவேண்டும்...?” என ஒரு சிறுவனின் உற்சாகத்துடன், “ஏன்..? எதற்கு...? எப்படி...?” எனக் கேள்விகளாலேயே துளைத்துக்கொண்டிருந்தார்.

அவரது ஒரு அமெரிக்க நண்பரிடம் தன்னை ஃபிளடெல்ஃபியாவினை சுட்டிக்காட்டும்படிக் கேட்டபொழுது இப்படிச் சொன்னாராம், “தம்பி இந்தியாதான் நல்ல சுற்றுலாதலம்.... நிறைய சரித்திரங்கள் உள்ளன.... இங்கே அது இல்லை....”

சுவாதியக்கா எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தார்.

எங்களது உரையாடல் சரித்திரமும் மொழியும் எப்படி பின்னி பிணைந்திருக்கின்றன என திரும்பியது.

“ஆங்கிலத்தில் Path என்றழைக்கப்படும் சொல் சமஸ்க்ருதத்தில் பத்தா... என்றழைக்கப்படுகின்றது. சமஸ்க்ருதம் தமிழுடன் கலந்தபொழுது ”பாதை” என்றானது. பாதை என்பது வடமொழிச் சொல். தஞ்சாவூரிலிருக்கும் பிரகதீஸ்வரர் ஆலயம் என்பது ப்ரஹ்து ஈஸ்வர் ஆலயம்...என்ற சமஸ்க்ருதச் சொல். பருஹ்து என்றால் மிகப்பெரிய. ஈஸ்வர் – சிவன். ஆலயம் = ஆ + லயம்... இறையுடன் இணையும் இடம்... தமிழில் கோவில்...ராஜராஜசோழன் காலத்திற்கு முன்னரே தமிழும் சமஸ்கருதமும் கலந்திருக்கின்றன என்பது தெளிவாகின்றன...”

ஆங்கிலத்தில் Tripod என்றால் முக்காலி. சமஸ்க்ருதத்தில் ட்ரிபாத்த என்கின்றோம்.

சில சொற்களில் ஒற்றுமைகளைக் காணலாம்.

ட்வே எனில் சமஸ்க்ருதத்தில் இரண்டு.. சில மேலை நாட்டினர் Duo என்கின்றனர்.

Navy – English Naval – Sanskrit இதே நாவல் என்ற சொல்லானது Frenchல் Naval, Italianல் navale, portugueseலும் naval, Romanianலும் naval அவ்வளவு ஏன் ஸ்பானீஷில்கூட நாவல் தான்...! ஒரே வார்த்தை. வெவ்வேறு Geographic locationல் வசிக்கும் மக்கள்... வெவ்வேறு கலாச்சாரம்.... ஆனாலும் மொழியில் ஒற்றுமை....!

அனைத்து இந்திய மொழிகள் மற்றும் பழைய பாரசீக மொழி, தாய், பர்மா, ஸ்ரீலங்கா Asia மொழிகள் இவைகள் அனைத்தும் அ, ஆ, இ,ஈ.உ,ஊ என்று ஆரம்பிப்பவை. அதுவே ஐரோப்பிய மொழிகளும் அரபும் ஏ,பி,சி,டி இவைகளையொத்து ஆரம்பிப்பவை. கிரேக்கமும் லத்தினும் Indo – European language என்றழைக்கப்படுகின்றது. ஆனால் சைன மொழியும் ஜப்பானிய மொழியும் கொரிய மொழியும் இதிலடங்கா.... அவை முற்றிலும் மாறுபட்டமொழிகள்.

இவைகள் இன்றல்ல நேற்றல்ல.... எத்தனை கோடானு வருடங்களாக அவர்களுக்குள் தகவல் பரிமாற்றம் இருந்திருக்கின்றன.

அவ்வளவு ஏன்...? கி.மு. (கிறிஸ்து பிறப்பதற்கு முன்)3 ஆம் நூற்றாண்டில் மெகாஸ்தனிஸ் மதுரைக்கு விஜயம் செய்தபின், 2500 வருடங்களுக்கு முன் அதாவது கி.மு.500ல் கிரேக்கமும் ரோமனும் மதுரையுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தன.

இன்றிருக்கும் தங்க காசு மாலையானது அன்றைய பாண்டிய மன்னன் கிரேக்க தங்க நாணயங்களை கோர்த்து மாலை அணிகலனாக மாற்றியபெருமையுண்டு. தங்கக்காசு மாலை பிறந்த கதை இதுதான்...! தங்ககாசு மாலையிலுள்ள காசின் விட்டமும் ஆரமும் கிரேக்க நாணயத்தின் அளவுகளே. ஆனால் இன்றைய விட்டத்தின் நிலை என்ன..? என எனக்குத் தெரியவில்லை. கிரேக்கர்களுக்கும் இந்துக்களுக்கிருப்பதைப் போல் கடவுளர்கள் இருக்கின்றனர்.

அலக்ஸாண்டர் கிமு 350களைச் சார்ந்தவர். நம் வள்ளுவரோ அதற்கும் முந்தைய காலம். பலரும் இந்தியாவினை அடையக் காரணம் என்ன தெரியுமா....?

அன்றைய காலகட்டத்தில் இன்றிருப்பது போன்ற துரித போக்குவரத்து வசதிகளோ அல்லது தகவல் பரிமாற்றங்களோ இல்லாமலிருந்தது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் வைரங்களும் இரத்தினக்கற்களும் ஸ்பைஸி என்றழைக்கப்படும் சுவைகூட்டும் உணவுப்பொருட்களும் வாசனை திரவியங்களும் அன்றைய பாரசீகர்கள் ஆப்கானிஸ்தான் வழியே .... அன்று சாலை வசதியிருந்தது... பொருட்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு வணிகம் செய்துகொண்டிருந்தனர். அன்று ஆப்கானிஸ்தானும் இந்தியாவின் ஒரு பகுதியே.... மகாபாரதத்தில் வரும் காந்தகார் இந்த பகுதியே....! மகாபாரதம் முழுதும் வடநாட்டில் நடந்திருப்பதாகவே அதன் ஊர்பெயர்களும் பாத்திரங்களும் அமைந்திருக்கும்.

ஐரோப்பியர்கள் இங்கிருந்து செல்லும் பொருட்களை அதிக விலைகொடுத்து வாங்கிக்கொண்டிருந்தனர். எனவே இடைத்தரகரின்றி வியாபாரம் செய்ய இந்தியாவிற்குச் செல்லும் பாதையினைத் தேடிக்கொண்டிருந்தனர். இந்தியாவிலிருந்த செல்வ வளங்களையும் கேள்விப்பட்டிருந்தனர்.

20-ஜூலை-356 கிமுவில் பிறந்து தன்னுடைய 32 ஆவது வயதில் பாபிலோனில் 10-ஜூன்-323 கிமுவில் மலேரியாவில் மரணித்த அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு வந்த பொழுது மிகவும் அதிசயித்துப் போனார்.

அவர் வருவதற்கும் முன்னரே இங்கே புத்தமதமும் ஜைன மதமும் சீக்கிய மதமும் இந்து மதத்தினையொட்டி முளைத்து தழைத்தோங்கியிருந்தன. இந்தியாவிற்கு இப்பெயர் வரக் காரணம் ஸிந்தி என்னும் நதி. மேலை நாட்டவர்கள் ஸிந்திஸ்தான் என்றழைத்து ... அது ஹிந்துஸ்தானாகி.... இந்தியாவாகியது. உண்மையான பெயர் பாரதம்.

இன்னொரு சொல் திராவிடன். இந்த சொல் எப்படி வந்தது தெரியுமோ...? தமிழன் என்ற சொல்லின் திரிபு. வடநாட்டவர்கள் தங்களது மொழியில் தமிழன் என்றழைப்பது... தமிழா.... ட்டமிழா.....ட்(d)டமிரா.... dரமிர....ட்ரவிர....ட்ராவிரா... ட்ராவிடா... என மருவியது....

அதன் பின்னர் இயேசு பிறந்து இஸ்ரேல்.. யூதர்கள்...இஸ்லாம்...என சரித்திரம் நீண்டது.

ஆனால் இந்தியாவில் அதற்கும் முன்னரே இங்கே நல்ல Civilisation இருந்திருக்கின்றது. இன்று MIT என்றழைக்கப்படும் Massachusetts Institute of Technology எப்படி கல்வியில் பேரும்புகழும் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றதோ.... அன்று நம் தேசத்தில் நாலந்தா பல்கலைக்கழகம் கருதப்பட்டது. மேலைநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு கல்வி கற்க வந்த மாணவர்கள் ஏராளம். காந்தாரக் கலை, வானியல், சோதிடவியல், யோகவியல், மருத்துவம், தொழில்நுட்பவியல் என மாணவர்கள் விரும்பி கற்றுச் சென்றனர். ம்ம்ம்.... இது அனுமார் வால் போன்று முடிவின்றி நீண்டுகொண்டிருக்கும் ஒன்று நிலா....”

“ஐயா வரலாற்றினை இவ்வளவு ஆழமாகப் படித்திருக்கின்றீர்களே....!”

“நிலா... உங்களுக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா....?”

“சொல்லுங்கள் ஐயா....”

“நான் வரலாறு புவியியலில் சரியாக 39 மார்க்குகள் வாங்கி... “அம்மா..... நான் பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டேன்...” எனத் துள்ளிக்குதித்தவன்....”

நிலாவின் முகத்தில் ஈயாடவில்லை.


தொடரும்....