Tuesday, July 8, 2008

மேலே வானம்.... கீழே நியூயார்க்....




பகலில் தூங்கி எழும்பொழுது ஒரு மென்சோகம் நம்மைக் கவ்விக்கொள்கின்றதே அது ஏன்...? இன்னதென்று புரிபடா ஒரு மென்சோகம். ஆனாலும் அதன் சுவை பிடிக்கின்றது. வலியும் இன்பமும் கலந்த ஒரு வித்தியாசமான கலவை. அது எதோ நமக்கு சொல்ல விழைகின்றது. என்னவென்றே புரிபடாமல் ஒவ்வொரு வார இறுதி பகல்களிலும் இது நிகழ்கின்றது...

அப்படி ஒரு வார விடுமுறை நாளில் தூங்கியெழுந்ததும் ஏற்பட்ட அந்த மென்சோகத்திலிருந்து விடுபட கிச்சன் சென்று மைக்ரோவேவில் ஏலக்காய் + இஞ்சி கலந்த டீ கலந்து (ஃபில்டர் காஃபி என்னாச்சின்னு யாரும் குறுக்காலக் கேக்கப்படாது... குறிப்பா ஷைலஜாக்கா...!!!) துளித்துளியாய் ரசித்து நாக்கின் மொட்டுக்களில் நனைத்து தொண்டை வழியே அதன் தித்திப்பை நனைத்து வயிற்றிற்குள் இறங்க மூளையிலுள்ள நியூரான்கள் சுறுசுறுப்பானது.

மணி பார்த்தேன். என் பிறந்தநாளுக்குப் பரிசாக மைக்ரோசாஃப்ட் அண்ணன் பில்கேட்ஸ் அனுப்பிய லேட்டஸ்ட் விண்டோஸ் மொபைல் 3:00 PM என்று உணர்த்தியது. (உண்மைதான்....! )

வாக் போகலாமா...? அருகிலிருக்கும் டைட்டானிக்கை ரசிக்கலாமா...? குயில்களின் இன்னிசையை ரசிக்கலாமா...? Starbuckல் ஒரு காஃபி குடிக்கலாமா...? மனதில் சலனங்களாய் அலைகள்.

ச்ச்சடேரென ISKCON( International Society for Krishna Consciousness) என் மெமரி டேட்டாபேஸிலிருந்து ட்ரிக்கர் ஆனது.

இது நியூயார்க்கில் Schermerhorn St, Brooklyn, NY 11217 ல் உள்ளது. நண்பனிடம் GPSஐ சுட்டுக்கொண்டு நானும் இன்னொரு நண்பனும் காரில் ISKCON ஐ நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.


முதலில் எனக்கும் இந்த ISKCONக்கும் என்ன தொடர்பு....?

 ISKCON. அங்கு நடக்கும் பஜனைகளால் நான் கவர்ந்திழுக்கப்பட்டேன். சின்னவயதின் நினைவுகளை அது கிளர்ந்தெழச்செய்யும். பிரபுபாதா அவர்களின் நூட்கள் படிப்பதற்குத் தலைவலியைத் தந்திட்டபொழுதிலும் முயற்சி செய்திருக்கின்றேன். மேலும் எனக்கு அதில் போதிய அளவு Convincing கிடைக்காததால் அத்துடன் நிறுத்திக்கொண்டேன்.அதன் பின் எனக்கும் ISKCONற்கும் அறவே தொடர்பற்றுப் போனது.

இங்கே நியூயார்க் வந்தபின் திரும்பவும் ISKCON னுடன் பரிச்சயம் ஏற்பட்டது. இங்கே கோயில் என்றால் அது ஃபிளசிங்கிலிருக்கும் பிள்ளையார் கோயிலோ, Baldwynலிருக்கும் சீரடி ஷாய் மந்திரோ அல்லது அருகில் நாயன்மார் வசிக்கும் நியூ ஜெர்சியிலிருக்கும் வெங்கடேஸ்வரையோதான் தரிசிப்பது வழக்கம். யோகா...? இன்னும் கூட்டம் சேரவில்லை. நியூ ஜெர்சியில் மட்டும் தவ மையம் இருக்கின்றது. நியூ யார்க்கில் இல்லை. அதனால் கோவில் மட்டுமே.

காரினை பார்க்கிங் செய்ய மிகவும் சிரமப்பட்டோம். நியூ யார்க்கில் கார் வைத்திருப்பது மிகப்பெரிய தலைவலியே....! கார் பார்க்கிங் செய்யும்பொழுது அங்கே இரண்டு கறுப்பினர்கள் நின்றிருந்தனர். எங்களையே வாட்ச் பண்ணிக்கொண்டிருந்தனர்.

மனம் பக்கென்றது.

(ஏனெனில் சமீபத்தில் நடந்த ஒரு துயர சம்பவம். என் நண்பன் ஒருவன் இரவு 9 மணி இருக்கும். ஊர் அடங்கிய வேளை. ரெஸ்ட்டாரெண்ட்டில் சாப்பிட்டுவிட்டு அலைபேசியில் யாருடனோ கதைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தான்.

அவனைப் பின்பற்றி இரு கருப்பின ஆண்கள். அவன் அணிந்திருந்த ஜாக்கட்டில் கத்தியால் குத்தி நிறுத்தினர். அவனிடம் இருந்த செல்ஃபோனைப் பிடிங்கினர். பர்ஸ், கிரெடிட் கார்ட் என அனைத்தையும் அபேஸ் பண்ணிவிட்டு ஓங்கி முகத்தில் குத்த, அவன் கதறிக்கொண்டே கீழே விழ முதுகில் காலால் ஃபுட் பால் ஆடி, 'யூ ....பிளடி இண்டியன்ஸ்...' என கோபம் கோபமாக கால்களால் முதுகிலும் அடிவயிற்றிலும் நடனமாட.... நண்பன் ஒரு மாதகாலம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலை. இப்பொழுது எங்கள் கைகளில் ஒரு டாலர்கூட இல்லை. அட்லீஸ்ட் கொஞ்சம் டாலர்களாவது கைவசம் வைத்திருப்பது நல்லது உயிர் பிழைக்க....)

இப்பொழுதும் அது போல் நடக்குமோ என பயத்தில் என்னுடல் நடுங்க ஆரம்பித்தது. அப்றம் தைரியம் வரவழைத்துக்கொண்டு அவர்களிடமே சென்று இஸ்கானிற்கு வழிகேட்டோம். ஒரு தினுசாகப் பார்த்துவிட்டு வழி சொன்னார்கள். திரும்பி வரும்பொழுது நம் கார் அங்கே இருக்குமா...? காரை காந்தி கணக்கில் சேர்த்துவிடவேண்டியதுதான் என்ற பயம்.

ISKCONனுள் சென்றால் நாம் இருப்பது இந்தியாவோ...? என பிரமிப்பினைத் தருகின்றது.

அமெரிக்க வெள்ளையர்கள். ஸ்படிகமாக வைணவர்களாய். நெற்றியில் U வடிவ நாமம். நடுவே மஞ்சள் வண்ணத்தில் ஒரு நீண்ட கோடு. எனக்குள் நீண்ட நாட்களாய் ஒரு ஐயம்.

சைவர்கள ஏன் விபூதியை கிடைமட்டமாகவும் வைணவர்கள் ஏன் நாமத்தினை செங்குத்தாகவும் இட்டுக்கொள்கின்றனர்....? நானும் இதுபற்றி ஒருமுறை என் குரு வேதாத்திரியிடம் உரையாடியிருக்கின்றேன்.

குண்டலினி யோகாவில் ஆக்கினையிலிருந்து துரியத்திற்கு தவ ஆற்றலை மாற்றியமைக்கலாம். ஆக்கினையிலிருந்து துரியத்திற்கு ஒரு நுண்ணிய நரம்பும் அதனருகே மற்றுமிரு நரம்புகளும் துரியம் என்ற பிரம்மரந்திரம் அடைந்து துவாதசாங்கம் ஏற்பட வழிவகுக்கின்றது. இங்குதான் விஞ்ஞானிகளுக்கு புதிய புதிய ஐடியாக்களும் ஆர்க்கிமிடிஸிற்குத் திடீரென ஐடியா ஃப்ளாசியது போல் பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொண்டு நம் பிரச்சினைகளுக்கு வழிகாட்டுகின்றது.

அமெரிக்க வெள்ளையர்களும் அப்படித்தான். பஞ்சகச்சம் அணிந்து, குடுமி வைத்துக்கொண்டு, கழுத்தில் ருத்ராட்சங்கள், காவி உடை.... இதையெல்லாவற்றையும் விட அவர்கள் ப்யூர் வெஜிட்டேரியன்களாக இருப்பது என்னை இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

கருப்பின மக்கள் அங்கே அழகாய் வைணவர்களாய் கிருஷ்ண பக்தர்களாய் பஞ்சகச்சம் கட்டி நெற்றியில் நாமமிட்டு.... அட போட வைக்கின்றது.

ஒரு கருப்பின ஐந்தாறு வயதுள்ள சிறுவன். வியப்பாய் இருந்தது. பஞ்சகச்ச வேஷ்டி. நெற்றியில் நாமம். அவன் வாயிலிருந்து, 'அழே..... கிஷுண்ணா... அழே கிஷூண்ணா... கிஷூண்ண கிஷூண்ணா அழே... அழே...' என பாடிக்கொண்டிருந்தான்.

வெள்ளைப் பெண்மணிகளும் அங்கிருக்கும் ராதா - கிருஷ்ணா வை மனமுருகி வழிபட்டனர். மெழுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். நம் ஊரில் நெய்தீபம் ஏற்றுவதற்குப் பதிலாக இங்கே மெழுகுவர்த்தியோ....? ஊருக்கு ஊர் அவரவர் செளகர்யத்திற்கேற்ப தீபம் ஏற்றுகின்றனரோ....?

பஜனை ஆரம்பம்.

மைலாப்பூர் முதியவர் அந்த தள்ளாத வயதிலும் டான்ஸ் ஆடினார். விஜய்யெல்லாம் ஆடுவது ஒரு டான்ஸா...? என சொல்லுமளவிற்கு மிக அற்புதமாக நடனமாடினார்.

டான்ஸ் பஜனை நடந்துகொண்டிருந்தது. என் சின்ன வயது ஞாபகங்கள். ஊரிலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவினில் கிருஷ்ணன் கோவிலில் லாந்தர் விளக்கின்(மின்சாரம் இல்லாத காலங்கள்...!) வெளிச்சத்தில் குத்துவிளக்கு மையமாக எரிய அதனைச் சுற்றி வட்டமாக நின்றுகொண்டு,

"ஆஞ்சநேய ஜீரா.. அனுமந்த சூரா...வாயு குமாரா.. வானர வீரா..." என்றோ... "நம்மாழ்வாரடி பணிவாய்... நம்மனமே இனி நம்மாழ்வாரடி பணிவாய்.." என்று அனைவருக்கும் பிடித்த அந்தப் பாடலையோ அல்லது , "எந்த்த தூரம் ....போத்திவ்விரா..." என்ற ஒரு தியாகராஜ கீர்த்தனையோ.... பார்வையாளனையும் நடனமாடுபவனையும் ஒருவித பரவசத்தில் ஆழ்த்தி லயத்தில் லயித்து அந்த இரவு முழுதும் இன்னதென்று சொல்லொணா உணர்வுகள் உடலிலும் உயிரிலும் நிரம்பி வழியும்... பேரானந்தப் பரவச நிலை.

இங்கேயும் அதே நிகழ்ந்து கொண்டிருந்தது. மிருதங்கம் வாசிப்பவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். அவரின் இயல்பே அதுதான். பலமுறை அவரைப் பார்த்திருக்கின்றேன் இங்கே. எப்பொழுதும் ஒரு புன்முறுவல். உற்சாகமாய்... மிகவும் உற்சாகமாய்....

நான் தனியே நின்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அவர்களின் நடனத்தினையும் இசையையும் அந்தக் கருப்புச்  சிறுவனின் நடனத்திலும் அவன் பாடமுயலும் அந்த மழலை மொழியும் என்னை வெகுவாய் கவர்ந்தது. அந்த சிறுவனின் வடிவில் இறைவன் இருப்பானோ....? அவனின் அந்த கள்ளங்கபடமற்ற மனதினில் இறைவனோ...?

ஏன் மனிதனுக்கு மட்டும் இத்தனை சிக்கல்கள்...? ஒன்று கிடைத்தால் அதில் திருப்தியில்லை. "அது இப்படி இல்லையே....? நான் எதிர்பார்த்தது வேறு; ஆனால் நடந்தது வேறு... இதைவிட பெட்டராய் இருந்தால் நல்லது..." என ஒப்புமை.

இதுதான் மனித இயல்போ...?

இவர்கள் அனைவருக்கும் அப்படி ஒரு பிரச்சினையில்தான் இறைவனை நாடி வந்திருக்கின்றனரோ....? அதோ அங்கே ஒரு பிரசங்கி; அவரின் வாழ்க்கையில்கூட இப்படி ஒரு அடிவிழுந்திருக்குமோ....? அப்படியாயின் இது பொருள் சார்ந்த புற விஷயமன்றோ...? இது நிறைவேறினால் அவர்களின் அபிலாஷை பூர்த்தியாகிவிடுமன்றோ....? எதில் உண்மையான நிறைவு....?

என் மனம் விரிந்தது.

பிரசங்கி உபநிசத்திலிருந்து ஒரு ஸ்லோகம் சொன்னார். அற்புதமான விளக்கமும் சொன்னார். அதனையே பலமுறை இனிமையாய் பாடிக்காட்டினர். நான் மெய்மறந்து அமர்ந்திருந்தேன்.

எல்லாம் முடிந்து அங்கே சிலையாய் வீற்றிருந்த பிரபுபாதாவிற்கும் ஒரு பை சொல்லிவிட்டு அந்த அமெரிக்கப் பிரசங்கியிடம் சில சந்தேகங்களைக் கேட்டுவிட்டு பஜனை ஹாலிற்கு வெளியே வந்தேன்.

அங்கேயும் ஒரு அமெரிக்க சாமியார் காவி உடையிலிருந்தார். என்னை அழைத்தார். வலுக்கட்டாயமாய் நமஸ்தே சொன்னார் நான் சொல்லும்முன்பாகவே...

'' ஆர் யூ ஃப்ரம் இண்டியா....?"

"யெஸ்"
"ஐயாம்.............. (எதோ வாய்க்கு நுழையாத ஒரு சம்ஸ்க்ருதப் பெயரைச் சொன்னார்.)'
"ஐயாம் ரவீந்திரன் கிருஷ்ணசாமி....எ சாஃப்ட்வேர் இண்ஜினியர்...."

இன்னும் அவரது புருவங்கள் உயர்ந்தன.
"ஓ...கிருஷ்ணசாமி....? கிருஷ்ணசாமி....?"
என மகிழ்ச்சியும் ஆச்சர்யத்தினையும் வெளிப்படுத்தினார்.

"நீங்கள் ஒரு ஆன்மீகவாதியோ...?"

நான் நாயகன் ஸ்டைலில் கண்கலங்கி "தெரியலியேப்பா.... தெரியலியே......"
என்றேன். ஏன் என்று கேட்டேன்.

"இல்லை.... உன் முகம் மிகவும் அமைதியாகவும்.... கொஞ்சம் தேஜஸாகவும் இருக்கின்றதே அதனால்தான் கேட்டேன்..."

தான் இந்தியாவில் பிறக்கவில்லையே என்ற வருத்தம் தன்னை மிகவும் வாட்டுவதாயும் தான் ஒரு ஹிந்து குடும்பத்தில் பிறக்கவில்லையே என்று வருந்துவதாயும் இந்தியாவில் பிறப்பதற்கும் ஒரு வரம் வேண்டும் என்றும் அது அனைவருக்கும் வாய்ப்பதில்லை என்றும் மிகவும் உருக்கமாகக் கூறினார்.

நான் கைபிசைந்து நின்றேன். மனம் நெகிழ்ச்சியாய் இருந்தது.

பின்னர் இன்னொரு அமெரிக்கர் ஸ்டாலில் பேசினார். அவர் ஒரு பேக்கரி கடை வைத்திருப்பதாயும் பாரதத்தில் பிறப்பது ஒரு மிகப்பெரிய புண்ணியமென்றும் "தாங்கள் என்னுடைய பேக்கரிக்கு வரமுடியுமா....?" எனவும் கேட்டார்.

மணி இரவு 9 ஆகியிருந்தது. இன்னும் 2 மணிதூரம் காரில் பயணிக்கவேண்டும். இன்னொரு நாள் கண்டிப்பாக வருகின்றோம் எனக்கூறிவிட்டு ப்ரசாதம் வாங்கச் சென்றோம்.

அது டின்னர். ப்ரசாதமல்ல.

இத்தனைபேர்களா ப்யூர் வெஜிட்டேரியன்கள்....? ஆச்சர்யப்பட்டுப்போனேன். நம் இந்திய உணவுகளே பரிமாறப்பட்டன.

கார் பத்திரமாகவே இருந்தது.

காரில் இஸ்கான் பாடல்களை ஒலித்துக்கொண்டே அந்த இரவினில் ட்ரைவ் செய்தது மிகவும் இனிமையாக இருந்தது.

ஏனோ தெரியவில்லை.... இனம்புரியா ஒரு இன்பமும் ஆச்சரியமும் ஆற்றலும் கலந்த ஒரு உணர்வு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள்வரை அலைஅலையாய் பாய்ந்து படர்வதை உணர்கின்றேன்.


-----------------
பின்னூட்டங்கள்:

Geetha Sambasivam
reply-to muththamiz@googlegroups.com
to muththamiz@googlegroups.com
date Mon, Jul 7, 2008 at 3:42 AM
subject [muththamiz] Re: Fwd: மேலே வானம்...கீழே நியூயார்க்....
mailing list Filter messages from this mailing list
mailed-by googlegroups.com
signed-by googlegroups.com

hide details Jul 7 (2 days ago)


Reply


இஸ்கானின் சாயங்கால வழிபாடும், அதன் பின்னர் உணவும் எப்போவும் எளிமை, சுவை, அருமை!!!
>>>> ரிஷியின் பதில்

>>>>>>>>>>>

ஆஹா....!!!!! அங்கிருக்கும் அந்த வழிபாட்டு முறைமைகளைப் பற்றி சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தால், நாவின் சுவையைச் சொல்றீங்களே....? வீட்ல சமையல் சரியா அவர் சமைக்றதில்லையோ.....? :):):):) எஸ்கேப்...

--------------------------

rom revathi narasimhan
reply-to muththamiz@googlegroups.com
to muththamiz@googlegroups.com
date Tue, Jul 8, 2008 at 6:56 AM
subject [muththamiz] Re: Fwd: மேலே வானம்...கீழே நியூயார்க்....
mailing list Filter messages from this mailing list
mailed-by googlegroups.com
signed-by googlegroups.com

hide details 6:56 AM (11 hours ago)


Reply


மென்சோகம்னால் மெலன்கலி?

வித்தியாசனமான் ஆனால் யதார்த்தமான அனுபவம்.

உங்கள் உலகத்தில் இருப்பவர்கள் நலமே வாழ அந்தக் கண்ணனே வழி காட்டட்டும்.

>>>>>>>>>>>>>

ரொம்ப ந்ன்றி.... கண்ணன் வழிகாட்டட்டும் என்ற உங்களின் வேண்டுகோளுக்கு ரொம்ப நன்றி.

அருட்பேராற்றல் கருணையினால் தாங்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களும் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம் ஓங்கி நீடுழி வாழ்க வளமுடன்.
----------------------------
from Lavanya Sundararajan
reply-to muththamiz@googlegroups.com
to muththamiz@googlegroups.com
date Tue, Jul 8, 2008 at 4:33 AM
subject [muththamiz] Re: Fwd: மேலே வானம்...கீழே நியூயார்க்....
mailing list Filter messages from this mailing list
mailed-by googlegroups.com
signed-by googlegroups.com

hide details 4:33 AM (13 hours ago)


Reply


நல்லா எழுதறீங்க
>>>>>>>>>>>>>>>>>>>

ஆஹா.... என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலியே.....! :):):):):)

உஸ்...! அப்பாடா.... சின்னக்குழந்தைக்கு சாக்லேட் கிடைச்ச சந்தோஷம் உங்க "நல்லா எழுதறீங்க"ன்ற ரெண்டு வார்த்தை பாராட்டிற்கு..

1 comment:

Jayashree Govindarajan said...

நல்ல பதிவு ரிஷி. படத்தை ஏன் சிலாகித்தீர்கள் என்று புரிகிறது. :)