Thursday, May 5, 2011

மேலே வானம்... கீழே நியூயார்க்....

மேலே வானம்... கீழே நியூயார்க்...

வானம்-5 நியூயார்க்-1 ...... (6-April-2009)

எங்கள் கிராம வாசக சாலையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு விடுத்திருந்தனர். வாக்கெடுப்பில் 72 வாக்குகளைக் குவித்து அறுதிப் பெரும்பான்மையாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட Margaret Cohee ஒரு புதன் காலையில் ஜனவரி 21ல் பதவியேற்ற அந்த நொடியிலிருந்து எங்கள் நூலகம் புதிதாக இரத்தம் பாய்ந்த உற்சாகத்தில் புதிய புதிய மாற்றங்கள். நான் விரும்பிய வண்ணம் செயல்பட ஆரம்பித்திருந்ததை எண்ணி மகிழ்ச்சி. அழைப்பின் காரணம்....?

தேசிய கவிதை மாதத்தினை(ஏப்ரல்) முன்னிட்டு, எங்கள் தாலுகாவினைச் சேர்ந்த Julie Sheehan என்ற இளங்கவிதாயினி சமீபத்தில் Barnard Women Poets Prize, Paris Review Bernard F.Conners Prize for Poetry, Poetry Society of America Robert H.Winner Memorial Award ஆகிய விருதுகளை அள்ளிக்குவித்த மகிழ்ச்சியில் அவர் தன்னுடைய Thaw மற்றும் Orient Point என்ற கவிதைத் தொகுதிகளிலிருந்து சில கவிதைகளை வாசிக்க வந்திருந்தார். புதிதாக இலக்கிய வட்டம் ஒன்றினை ஏற்படுத்தி இந்த பகுதியில் வசிக்கும் எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட ஆயத்த பணிகள் நடந்துகொண்டிருந்தன.

எங்கள் நூலகம் சற்றே பெரிய நூலகம். விழா நடக்கும் இடம் நூலகத்தில் ஒரு வாசிப்பு அறையை ஒதுக்கியிருந்தனர். மாலை 2 மணி விழாவிற்கு சரியாக 1:40க்கு நுழைந்து எனக்குத் தேவையான தலையணைப் புத்தகங்களை என் கணக்கில் பதிவிட்டு அள்ளிக்கொண்டு நேர நிர்வாகம் பற்றிய தொடர் எழுதுவதன் விழிப்பின் காரணமாக சரியாக 1:58ல் விழா நடக்கும் இட்த்திற்கு விரைந்தேன்.

நான் கற்பனையில் நம் ஊர் கவியரங்கங்களை மனதினுள் கற்பனை செய்து வைத்திருக்க.... பெருத்த ஏமாற்றம்... ஒரு மைக்... ஒரு பத்துப் பதினைந்து நபர்கள்; அதுவும் வயதானவர்கள்... பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதியோர்கள்... விழாவிற்கு வந்தவர்களில் பெரும்பான்மையோர் பெண்மணிகள். அவர்களுடன் சில வாண்டுகள்.

நான் என் கையில் ஒரு மஞ்சள் பையுடனும் தொள தொளவென்ற தாத்தாவின் முழுக்கைச் சட்டையை முழங்கைவரை மடித்தும், ஜீன்ஸ் அணிந்து தலைநிறைய வடிய..வடிய எண்ணெய் தேய்த்து நெற்றியில் குன்னக்குடி வைத்தியநாதன் ஸ்டைலில் விபூதியும் குங்குமமும் அணிந்துகொண்டு கரங்களில் தலையணைப் புத்தகங்களைத் தூக்கமுடியாமல் சுமந்துகொண்டும் “ஙே” என விழித்துக் கொண்டே தயங்கித் தயங்கி நுழைந்தேன்.

என் தயக்கத்திற்குக் காரணம் யாரும் பரிச்சயம் இல்லை. ஒரு இந்தியர்கூட இல்லை. எல்லாம் அமெரிக்கர்கள். அதுவும் அமெரிக்க ஆங்கிலத்தில் தஸ்ஸூ...புஸ்ஸூ என அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.

எனக்கு ஆங்கிலம் என்றாலே அலர்ஜி. அமெரிக்கா வந்தால் ஆங்கில அறிவு வளரும் என நான் தவறாக எண்ணியிருந்தேன். ஆங்கிலத்தில் மற்றவர்களைப் போல் இனி சரளமாகப் பேசலாம் என்றெல்லாம் தவறாக்க் கணித்திருந்தேன். இங்கு வந்தபின் வளர்ந்த்தென்னவோ தமிழும் தெலுங்கும் மட்டுமே. திருடனுக்குத் தேள் கொட்டியது போல் “அட கெரகமே” என விழிக்க வேண்டிய நிலை...!

ஒரு முறை நான் ஐந்தாம் வகுப்பு பயிலும் பொழுது விஜயா டீச்சர் பாடம் நட்த்திக்கொண்டிருக்க நானோ விட்ட்த்தினைப் பார்த்துக்கொண்டு வேறேதோ நினைவினில் அமிழ... திடீரென சரியாக என்னை நோக்கி வினா எழுப்ப.... வழக்கம் போல் தேமே என விழிக்க.... அப்படியே அருகிலிருக்கும் மாணவனிடம் கேட்க... ”அங்க மட்டும் என்ன வாழுதாம்...?” என நான் எண்ணியவாறே அவனும் விழிக்க... கடைசி பெஞ்ச் மாணவர்கள் கொல்லென சிரிக்க... டீச்சருக்குக் கோபம் வந்து, “”Last bench get out…” எனச் சொல்ல.... கடைசி பெஞ்ச் மாணவர்கள் அமைதியாக நிற்க, நான் என் அருகிலிருந்த் மாணவனை அழைத்து கடைசி பெஞ்ச்சினைத் தூக்கி வகுப்பறைக்கு வெளியே இருக்கும் வராண்டாவில் கொண்டு போய் போட்டுவிட்டு வகுப்பறைக்குள் நுழைய.... வகுப்பறையே கொல்லென சிரிக்க.... “இந்தப் பயபுள்ளக எதுக்கு இப்டி சிரிக்றாய்ங்க...”ன்னு “ஙே”...ன்னு விழிக்க......இப்படித்தாம்யா இருந்துச்சி.. இப்பவும் இருக்குது நம்ம இங்கிலீபீஷூ...!

பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் வழக்கமாய் அமரும் கடைசி பெஞ்ச்சில் சென்று அமர்வதைப்போல் இங்கும் அமர... எனக்கு முன்னாலிருந்த ஒரு அழகிய இளம்பெண் என்னைத் தன்னருகே காலியாக இருக்கும் இருக்கையில் அமர வரும்படி அழைத்தார்.

“சே... இந்த பெண்மணி ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே...”ன்னு நினைத்துக்கொண்டேன். வடிவேலு ஒரு பட்த்தில் பார்த்திபனுடன் வங்கிக்கு ஜாமீன் கையெழுத்துப் போடச் செல்லும்பொழுது எதிரே வரும் ஒரு பலியாட்டினைப் பார்த்து வடிவேலுவிற்கு ஒரு உள்ளுணர்வு வருமே...? அது எனக்கு அப்பொழுது மிஸ்ஸிங்காகியிருந்த்து....!

வாண்டுகள் அமைதியாக சேட்டைகள் செய்துகொண்டிருந்தனர். அவர்களும் ஆங்கிலத்தில் உரையாட்... எனக்குள் பெருவியப்பு... “அட... இம்புட்டு கோணி சின்ன சின்னப் பசங்கள்ளாம் எப்பிட்றா இம்புட்டு அழகா இங்கிலீபீஷூ பேசுறாய்ங்க...”ன்னு ஒரே ஆச்சர்யமா இருந்துச்சி.

சரியாக 2 மணி ஆனவுடன் என்னருகே அமர்ந்திருந்த அந்த இளம்பெண் சரேலென எழுந்து மைக்கை நோக்கிச் சென்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்தான் அந்த கவிதாயினியாம். அடக் கெரகமே...! முன்னாடியே சொல்லக்கூடாதா...? முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவங்க கூப்ட்ட அந்தப் பக்கம் தலைவச்சாச்சும் படுத்திருப்பேனா...? ”போச்... போச்.... இனி அந்த பெண் நம்மளதான் கேள்வி கேட்கப்போறாங்க.....” எனக்கு அப்பவே விளங்கிடுச்சி. ம்ம்ம்... ஒரு மனுஷனுக்கு எம்புட்டு கஷ்டம்தான் வர்ரது ஆண்டவா...!

அந்தம்மா ஆங்கிலத்துல சொன்னதால் நமக்கு எதுவும் மண்டையில ஏறல. கையில ஐஸ் டீ எடுத்துட்டு கண்ணை மூடிட்டி ஒவ்வொரு துளியா ரசிச்சிக் குடிச்சிட்டு இருந்தேன். அது நாக்கில் அதன் சுவையை நிறுவி தொண்டையில் சுவையுணர்ந்து அப்படியே ரசித்து ஒவ்வொரு மடக்காக விழுங்கினேன். இடையிடையே அந்தம்மா சொல்லும் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் விழுந்த்து. அதுல LOVEன்ற வார்த்தை மட்டும் நல்லா தெரிஞ்சது. அந்தம்மா ரொம்ப உணர்ச்சிகளோட கவிதை படிச்சுட்ருந்தாங்க.

இங்கேயும் அந்தம்மா நிலாவினைப் பற்றிதான் கவி சொல்லிட்ருந்தாங்க. உலகத்துல எல்லா பயபுள்ளகளும் நிலாவினை விட்டுவைக்க மாட்டாய்ங்களோ....?ன்னு நெனச்சிக்கிட்டேன். கர்நாடக சங்கீதக் கச்சேரியில் நமக்கு ராகம் தாளம் ஸ்வரம் இப்படி எதுவுமே தெரியாட்டின்னாக்கூட நமக்கு அதெல்லாம் தெரியும்ன்ற மாதிரி தலையை அசைத்து அசைத்து ஒரு பாவ்லா பண்ணுவோமே....? அது மாதிரி அப்ப்ப்ப புரியறமாதிரி தலையை ஆட்டி வைச்சேன். அந்தம்மாவுக்கு ஒரே சந்தோஷம் நான் அவங்க கவிதையை நல்லா ரசிக்றேன்னு...!

அப்றம் ஒரு வழியா 4 ம்ணிக்கு கூட்டம் முடிஞ்சது. அப்பாடா... தப்பிச்சோம்ன்னு நெனச்சி எஸ்கேப் ஆகிறப்ப அந்தம்மா என்னைக் கூப்ட்டாங்க. எனக்கு எப்டி இருக்கும்...? சின்ன வயசுன்னா நான் வரமாட்டேன்... போ...........ன்னுட்டு ஓடிடலாம்..ஆனா காம்ப்ளான் குடிச்சி பெரிய பையனா ஆனபிறகு இப்ப அப்டி ஓட முடியுமா...?

வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு என்னவோ ஏதோன்னு போனேன். ”Hey…. Are you a writer…..?” அப்டீன்னு கேட்டார். அட கெரகமே...ன்னு நெனச்சிகிட்டேன். “I can read your mind….” அப்டீன்னார். எனக்கு பக்குன்னு ஆய்டிச்சி. ”அப்டியெல்லாம் இல்லைம்மா.... நான் கிறுக்கனா இருக்றதால நம்பிக்கை,முத்தமிழ் இதுமாதிரி கூகிள் குழுமங்கள்ல அப்ப்ப்ப எனக்கு மூடு வர்ரப்ப தமிழ்ல்ல ஒன்னு ரெண்டு..கிறுக்குவேன்... அம்புட்டுதான். தாயி..! “

“ஆங்கிலத்தில் எதுவும் முயற்சிக்கவில்லையா....?”

“Mind Engineering, The Art of Excellence, The Art of Studying” அப்டீன்னு முயற்சி மட்டுமே பண்ணினேன். அதுக்கப்றம் மூடு வர்ல. ஏறக்குறைய ரொம்ப வருஷங்கள் கழிச்சி இப்போ திரும்பவும் டெக்னிக்கல் கட்டுரைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றேன்...”

“எழுது...எழுது...இலக்கியத்தில் நீ எழுது... தொடர்ந்து எழுது... வானம் ஒரு நாள் வசப்படும்... கண்டிப்பாக ஒரு நாள் நோபெல், புலிட்சர் போன்ற உயர் பரிசு கிடைக்கும்...”

“அட... நீங்க எப்டி சொல்றீங்க....? ரொம்ப ஆச்சர்ய்மா இருக்கே..!”

“நீ டீ குடிச்ச ஸ்டைலேருந்தே கண்டுபிடிச்சேன்.... எல்லாமே உணர்கின்றாய்.... ரசிக்கின்றாய்... இதுதான் ஒரு எழுத்தாளனுக்குத் தேவை...”

“இல்லையம்மா... .நான் டீ குடித்தது ஜென் மெடிட்டேஷன்... அது ஒரு தவம்.... நான் எதையுமே அப்படித்தானம்மா செய்வது வழக்கம்....உங்கள் கணிப்பு தவறாகிவிட்ட்தே....”

இப்பொழுது கவிதாயினி “ஙே” என விழித்துக்கொண்டிருந்தார்.

பை சொல்லிவிட்டு இடத்தைக் காலிசெய்தேன்.

No comments: