Thursday, May 5, 2011

மேலே வானம்...கீழே நியூயார்க்...

மேலே வானம்...கீழே நியூயார்க்...

வானம்-4 நியூயார்க்-1 ...... (10-August-2008)

இன்னும் மதிய உணவு சாப்பிடவில்லை. இன்றும் நேற்றுமாதிரி கிரிக்கெட் விளையாடலாமா...? என யோசித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் பந்து ஆசையுடன் என்னை முத்தமிடும்பொழுது எனக்குள் எத்தனை காயங்கள்....?. என் மாணவப் பருவத்தில் முன்பு ஒரு முறை என் மூக்கையும் நெற்றியையும் பதம் பார்த்தது. சென்ற வருடமும் ஒரு மிகப்பெரிய விபத்து.

ஒவ்வொருமுறை பந்து விழும்பொழுதெல்லாம் உலகமே இருண்டுவிட்டது போன்ற ஒரு உணர்வு. இனிமேல் கிரிக்கெட்டை மூட்டை கட்டி வைத்துவிடவேண்டும் என ஒவ்வொருமுறையும் நினைப்பதுண்டு. நேற்றும் இரவு 8 மணி வரை கிரிக்கெட் விளையாடியதில் வேகமாக வந்த பந்தினைத் தடுக்க, அது சரியாக என் கால்களின் முட்டியால் தடுக்க, முட்டி, பந்தினால் முத்தமிடப்பட்டு வலியால் துடித்தது.

வீட்டுப் பெரியவர்கள் ஃபோன் பண்ணி, இனிமேல் கிரிக்கெட் மட்டையே பிடிக்கக்கூடாது என தடா போட்டதினால் ஒரு இரண்டொரு நாட்களுக்கு (மட்டுமே...!) நல்ல பையனாய் இருந்தாக வேண்டிய சூழல்

கிரிக்கெட்டிற்காகத் தேர்வுகளையே ஒத்திவைத்த சரித்திரம் எங்கள் யுனிவர்சிடியில் நடந்தது. அப்பொழுது உலகக் கிரிக்கெட். நாங்கள் அனைவரும் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம். எனவே யுனிவர்சிடி துணைவேந்தருடன் பேசி பல்கலைத் தேர்வுகளை கிரிக்கெட் ஜூரம் முடிந்தவுடன் நடத்தும்படிக் கேட்டுக்கொண்டு அதில் வெற்றியும் பெற்று கிரிக்கெட்டைக் கண்டு மகிழ்ந்தோம்.

இறுதியாண்டில் பல்கலைபோட்டியில் எதிர்பாராவிதமாகக் கடைசி பந்தில் நான் அடித்த ஒரு சிக்சர் எங்கள் கிரிக்கெட் அணி வெற்றிபெற காரணமாகிப்போனது என்னாலேயே அந்த நொடியில் நம்பமுடியவில்லை. ஏனெனில் நான் கிரிக்கெட்டினை என்றுமே நேர்த்தியாக விளையாடியதில்லை. அதனை கிட்டி என அழைக்கப்படும் கில்லி போன்றே எங்கள் கிராமத்து ஸ்டைலில் விளையாடக்கூடியவன்.

அப்பொழுது கவாஸ்கர் புகழின் உச்சியிலிருந்தார். ஆனாலும் எனக்கு கபில் மிகப்பெரிய ஹீரோவாகத் திகழ்ந்தார். அதற்குப் பல காரணங்கள். முதன்மையான காரணம் அவரது தன்னம்பிக்கை கலந்த அந்த ஆளுமை.

என் வாழ்வின் ஒவ்வொரு கடினமான பொழுதுகளிலும் கபில் பந்துவீசுவதையும் உலகக்கோப்பைக்காக தனியொரு ஆளாகவே நின்று ஜிம்பாப்வேயை வெளுத்துக் கட்டியதும் மட்டுமே அடிக்கடி என் மனதினில் படமாய் விரிவடையும்.(இத்தனைக்கும் அந்த உலகக்கோப்பையின்பொழுது எனக்கு கிரிக்கெட் அவ்வளவு பரிச்சயம் இல்லை. மேலும் டிவிகள் வராத காலகட்டங்கள். எல்லாம் பத்திரிகைகளின் உதவியால்...) உடனே உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

எங்கள் யுனிவர்சிடியில் பெளதிகத்தில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வெளியுலகிற்கு ஒளிவீசிய விஞ்ஞானி்கள் பலர். எனவே வருடத்திற்கு இருவர் அல்லது மூவர் மட்டுமே தேர்ச்சியடையவேண்டும் என்பது அன்றைய காலகட்டங்களில் எழுதப்படாத ஒரு சட்டமாக இருந்தது.

வைவா என்றொரு சடங்கு ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு மூன்று மணிநேரம் நிகழும். IIT, IISc மொசைக் தலை பேராசான்களும் BHU, Pune University என பல்வேறு பல்கலைக்கழகப் பேராசான்கள் இரையை விரட்டும் புலி போல ஒரு குழுவாக அமர்ந்திருப்பர்.

எங்கள் யுனிவர்சிடியில் எங்கள் துறையில் முதுநிலை இறுதியாண்டில் ஒரு 12 மாணவர்களும் ஒரே ஒரு மாணவியும் இருந்தோம் எங்கள் 13 மாணவர்களுக்கும் வைவா மட்டும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும். முதல் பலியாடு சாட்சாத் நானேதான்..!

Millman Halkias, JD Ryder, J.Brophy, C.Kittel, Ritz & Milfred, Malvino Leach, Irving Kaplan, John Benedict, Eugen Merzbacher, Robert D Evans இன்னும் பல ஜாம்பவான்களின் தலையணைப் புத்தகங்களைத் தலைகீழாய் கரைத்துகுடித்துவிட்டும் IISc யிலிருந்து வெளிவரும் Journalகளையும் படித்துவிட்டு வைவாவிற்குச் சென்றால் ஒரு கேள்விக்குக் கூட விடையளிக்க இயலாது. எல்லாம் நம் மூளையைப் பயன்படுத்தி பதிலளிக்கும்படியாய் இருக்கும்.(அதுதான் நமக்கு இல்லாத ஒன்றாயிற்றே...!) பாதி பயத்தில் நாக்கு குழறி உடலெல்லாம் வேர்த்துக் கொட்டும்.

அப்பொழுதெல்லாம் கபில்தேவின் அந்த தன்னம்ப்பிகையினையே நான் மானசீகமாக உருவகிப்பேன். நானும் இப்பொழுது ஒரு கபில்தேவ். வினாக்கள் என்ற பந்துகளை பவுண்டரிகளுக்கும் சிக்சர்களுக்கு விளாசுவதைப்போல் கற்பனை செய்துகொள்வேன்.

ஸ்ரீகாந்தின் அதிரடி ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். வெங்சர்க்கார் நிதானமாய் விளையாடி 50 ரன்களை சேர்த்துவிட்டு தன் கடமை முடிந்தது என்று போய்விடுவார். ரவி சாஸ்திரியை 'கட்டை போட்றான்' என கமெண்ட் அடிப்போம். சில (பல) வேளைகளில் பொறுப்பில்லாமல் ஆடுவார்.

மணிந்தர் சிங்கை முனி மணிந்தர் என்போம். கவாஸ்கர் உலகத் தரத்திலிருந்தாலும் அவர் ஒரு நாள் ஆட்டத்தில் 1987 ல் ஜிம்பாப்வேக்கு (சரிதானே...? ) எதிராக முதன் முறையாக சதம் அடித்தார். அவரது ஆட்டம் ஏனோ என்னைக் கவரவில்லை!

வைவாவில் இந்த உத்தி எனக்கு கைகொடுத்தது.

Linear ICயும் Non-Linear ICயும் எப்படி வேறுபடுகின்றது…? என ஒரு IIT புரபசர் கேட்க அன்று அதிகாலை 6 மணிக்குத்தான் நூலகத்தில் (எங்கள் நூலகம் 24 மணிநேர நூலகம். லேபும் அப்படியே..! ஏறக்குறைய ஆராய்ச்சி மாணவர்கள் போல் படித்தோம்..!) அன்றைய லேட்டஸ்ட் ஆராய்ச்சி நிலவரம்(Integrated Circuit) IISc மாகசினைப் படித்துவிட்டிருந்தேன்.

காலை 7 மணிக்கு எனக்கு வைவா. நான் முதல் மாணவன் என்பதால் அது மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்டு 4 மணி நேரத்தினைத் தொட எத்தனித்தது.
கபில்தேவ் மாதிரி தன்னம்பிக்கையுடன் விளாசித்தள்ளினேன். ஆனாலும் அந்த IIT புரபசர் நம்ப மறுத்தார்.

நான் அந்த Journalலில் இந்த பக்கத்தில் இப்படித்தான் அதனது I-V Features Curve இருக்கின்றது என ஒரு குறிப்பிட்ட IC யினை மையமாக வைத்து Derivation னெல்லாம் கரும்பலகையில் derive பண்ணி சரியென வாதிட்டேன். அதற்குக் காரணம் கபில்தேவின் அந்த தன்னம்பிக்கை மனோபாவமே.

வைவாவில் பாசான அந்த மூன்று மாணர்களுள் அடியேனும் ஒருவன்....! மற்ற அனைவரும் கடின உழைப்பாளிகள் + (Born Genius) எனப்படும் அறிவாளிகள். நான் ஒருவனே ஒன்றாம் வாய்ப்பாடு கூடத் தெரியாத ஒரு மக்கு மாணவன்…!

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தென்கோடியில் ஒரு குக் கிராமம். கில்லி, பேந்தான், கபடி, நீச்சலடித்து விளையாடுதல், காக்கா குஞ்சு, கள்ளம்போலீஸ், ஐஸ்ப்ளே, பேங்க்கர், பாவக்கூத்து, நாடகம், நடனம்ன்ன்னு இப்படித்தான் எங்களோட விளையாட்டுக்களிருக்கும். கிரிக்கெட்டுன்னா என்னன்னே எனக்குத் தெரியாம இருந்துச்சி பள்ளி இறுதிவரை. பள்ளியில் Soft Ball என்ற விளையாட்டினை நாங்கள் விரும்பி விளையாடுவோம். அதுவும் ஏறக்குறைய கிரிக்கெட்டைப் போன்றே இருக்கும். ஆனால் அதிக வித்தியாசங்கள்.


ஒரு முறை வானொலியில் ஒரு வர்ணனை கேட்க நேரிட்டது.

அப்பொழுது அது எதோ ஒரு விளையாட்டு என்று மட்டும் எனக்குப் புரிந்தது. அதில் அந்த வர்ணனையாளர், 'பந்து இப்பொழுது பெளரிடமிருந்து (இதுக்கு தமிழ்ல்ல என்னன்னு தெரியல. ஆனா அந்த வர்ணனையாளர் தூய தமிழ்ல்லதான் சொன்னார்.) மட்டையாளரை நோக்க்சிச் செல்கின்றது..... மட்டை மீது பட்டு தெறித்துச் செல்கின்றது... தடுப்பாளர் அதனை எக்கிப் பிடிக்க முயல்கின்றார்.... மழுமழுவென சேவிங் செய்யப்பட்ட மீசையிலிருக்கும் அந்த மீசைமுடி அளவு இம்மியின் தொலைவில் பந்து நழுவிச்செல்கின்றது...' என்ற பொருள் பட வர்ணித்தார்.

இந்த வர்ணனை என்னை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது. முதலில் அது Soft Ball லோ என நினைத்தேன். பின்னர் அது கிரிக்கெட் எனத் தெரிந்தது. இப்படித்தான் எனக்கு கிரிக்கெட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்பொழுது அந்த வர்ணனையாளர் வர்ணனை செய்த விதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவரது பெயர் என்ன என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் அது 1980 அல்லது 1981 (வருடம் கூட நினைவிலில்லை) களில் சேப்பாக்கத்தில் நடந்தது. இந்தியாவிற்கும் இன்னொரு அணிக்கும்.

கிரிக்கெட்டில் அப்பொழுது எனக்கு பரிச்சயமில்லாததால் இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. பின்னால் இந்த வர்ணனை என் வாழ்வில் நம்ப முடியா ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. அந்த வர்ணனையாளர் பின்னாளில்(2007) என் நண்பரானார். அவர் என் எழுத்திற்கு விசிறியாகி அவராகவே முன்வந்து நட்பு உருவாக்கியது மிகவும் நெகிழ்ச்சியாக்கியது என்னை. இந்தியாவிற்கு வந்தால் தங்களது வீட்டிற்குக் கண்டிப்பாக வரவேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்தார் அந்த பெரியவர்.

1996 கோப்பையில் இல்ங்கை அணி ஒரு புதிய பாடம் சொல்லிக்கொடுத்தது. ஒரு பந்திற்கு ஒரு ஓட்டம் என 300 பந்துகளில் 300 ஓட்டங்களை எடுக்கவேண்டும் என. அதுவரை கிரிக்கெட்டில் யாருமே அப்படி சிந்திக்கவில்லை.

முதல் பத்து பதினைந்து ஓவர்களில் கட்டை போட்டு அவுட்டாகாமல் நிற்பது; பின்னர் கடைசி பத்து ஓவர்களில் அடித்து அதிரடி ஆட்டம் ஆடுவது என ஒரு 200 ஓட்டங்கள் எடுத்தாலே மகிழ்ச்சியாகிவிடும் காலமது.

இலங்கை அணியே அதனை உடைத்தெறிந்தது. ஆரம்பம் முதலே அடித்து ஆடி ஒரு பந்து - ஒரு ஓட்டம் அதில் குறியாக இருந்தனர். காலம் கைகூடும்பொழுதெல்லாம் சிக்சரும் ஃபோருமாக வெளுத்து சர்வசாதாரணமாக 300 ஓட்டங்களை எவ்வித சிரமமுன்றி எடுக்க முடிந்தது. மேலும் அவ்வணியின் தலைவர் அவ்வணியை மிகவும் கட்டுக்கோப்பாக நடத்திச் சென்றார்.

சில சமயங்களில் ஜெயசூர்யா தன் வெற்றிக்களிப்பு மமதையில் கொஞ்சம் துள்ளும்பொழுதெல்லாம் விழிப்பு நிலைக்கு கொண்டு வந்து அனைவரையும் அடக்க ஒடுக்கமாய் நடக்க வழிவகுத்தார்.

எதிரணியினர் கூட இவ்வணியின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தது. எங்கு விளையாடுகின்றனரோ அந்த ஊர் மக்களும் ஆதரவளித்தனர். ஆட்டம் முடிந்ததும் ஒரு பிரார்த்தனை. பெளத்த மதத்திலிருந்த ஜென் தவத்தினை ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்தினர். தன்னிலை இழக்காது நடுநிலை பிசகாது அளவற்ற பொறுமையுடன் நடந்துகொண்டனர். மிகவும் பொறுப்பான தலைமை.

இப்படி கிரிக்கெட் இந்த நொடிவரை என் வாழ்வில் என்னையறியாமலேயே பின்னிப் பிணைந்துவிட்டது.

சரி மூலக்கதைக்கு வருவோம்.

பக்கத்து அபார்ட்மெண்ட் நண்பர்கள் வருகை. வெளியே எங்காவது கிளம்பலாம். இரண்டு தக்காளிகளை ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில் கூழாகும் வரை வதக்கி அதன்பின்னர் அதனுடன் தட்டிய இஞ்சி+ பூண்டுத் துண்டுகள், ஒரு தேக்கரண்டி சீரகம், அரைத் தேக்கரண்டி மிளகு, மஞ்சள் பொடி, ரசப்பொடி, உப்பு, மல்லித் தழை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கினால் இதுவரை இல்லாத ஒரு புதிய தொரு வடிவம் பெற்றது. ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து, புளியை மைக்ரோவேவ்வில் சூடுபடுத்தி கரைத்து அந்த தக்காளிக் கலவையில் கலந்து கொதிக்கவைதது,. மீண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து தாளிதம் செய்து இறக்கினால் அருமையான ரசம் தயாரானது. சாப்பிடப்போவது நண்பர்கள்தானே (ஏனெனில் நான் பூண்டு இஞ்சி சாப்பிடுவதில்லை) என நினைத்து 'அப்பாடா... அது அவர்களின் தலைவிதி....! விதி அப்படி இருக்கும்பொழுது நான் என்ன செய்துவிடமுடியும்....?' என்னை நான் சிறிது ஆற்றுப்படுத்திக்கொண்டேன்.

முக்தமயி சர்க்கார். இந்தப்பெண் சுவீடனில் MS Computer Science முடித்தகையுடன் சென்றவருடம் இங்கே வந்துவிட்டார். Md.Mulla Khairul Bhasar இந்தப் பையனும் Swedan MS. இருவரும் பங்களாதேஷில் டாக்கா. ஏறக்குறைய நம் பெங்காலிகளின் வாழ்க்கை முறையையொத்து இருக்கின்றது பங்களாதேஷ் மக்களின் வாழ்க்கை முறை.

இவர்களிருவரும் என் சமையலின் தீவிர ரசிகர்கள்.

சாப்பிட்டு முடித்ததும் நடையை ஆரம்பித்தோம். எங்கு செல்லலாம்…?
நான் வசிக்கும் இந்தக் கிராமத்தினைப் பற்றி…?

Port Jefferson. இதுதான் நான் வசிக்கும் ஒரு அழகிய கிராமம். இந்தக் கிராமம் பணக்காரர்கள் தங்களது வாழ்க்கையை அனுபவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கிராமம். விலைவாசிகள் நியூ யார்க்கில் மன்ஹாட்டன் போலவே இங்கும் அதிகம். ஆனால் நியூ யார்க் போன்று ஜன நெருக்கடி இருப்பதில்லை.

இங்கே தொழில்கள் என்றால் எதுவும் மிகப்பெரிய அளவில் இல்லை. மீன்பிடி உண்டு. துறைமுகம் உண்டு. மற்ற தொழில்களெல்லாம் பக்கத்து பக்கத்து ஊர்களில். இந்த கிராமம் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான அமைதியான வாழ்க்கை வாழ்வதற்காகவே அமைக்கப்பட்டது....என் பெரும்பாலான ஓய்வு நேரங்கள் இங்கிருக்கும் நூலகத்தில் செலவழியும்.

<<<<<<<<<<<<< கீழேயுள்ள படம் எங்கள் கிராம நூலகம்.... >>>>>>>>




துறைமுகம் நோக்கி நடைபயின்றோம்.

வழியில் ஒரு ஐஸ்க்ரீம் பார்லருக்குள் நுழைந்தோம். ஒரு சிறுவன் தன் அப்பாவிடம் ஒரு குறிப்பிட்ட ஐஸ்க்ரீம்தான் வேண்டும் என அடம்பிடித்தான். தன் கோபத்தினை தன் முக பாவங்களில் காட்டினான். கை கால்களை உதறி கத்த ஆரம்பித்தான்.

குழந்தைகள் கோபப்படும்பொழுதும் கூட எவ்வளவு அழகாய் இருக்கின்றனர்....?

குழந்தைகள் எவ்வளவு மென்மையானவர்கள்….?

ஒரு ஆறுமாதக் குழந்தையைப் பாருங்கள்...! பஞ்சுபோலிருக்கும் அந்தப் பிஞ்சுக் கரங்கள்.... ! தன் கண்களை இடுக்கி, 'ஆர்ரா இவன்....?' எனப் பார்க்கும் அந்த பார்வை...!

நாம் குழந்தையின் கரங்களைப் பற்றினால் தன் பிஞ்சுக் கரங்களினால் நம்மை இறுகப் பற்றிக்கொள்கின்றதே... அந்த பிடிப்பில், 'நீ என்னைக் கைவிட்டாலும் நான் உன்னைக் கைவிடமாட்டேன்....? ' என்ற தகவலைச் சொல்கின்றதா அல்லது ' நான் இப்பொழுதுதான் உங்கள் புவி கோளிற்கு வந்திருக்கின்றேன்...என்னைக் கைவிட்டுவிடாதே.. உன்னைத்தான் நம்பியிருக்கின்றேன்....' என்கின்றதா...? தன் பாதுகாப்பின்மையை உணர்த்துகின்றதா...? அல்லது 'நீ நல்லவன் ...உன்னுடன் நட்பு கொள்ள விரும்புகின்றேன் ‘ என சமிக்ஞை செய்கின்றதா…?

ஏன் எல்லா குழந்தைகளும் அழகாய் இருக்கின்றனர்....?

குழந்தையின் ஜீவகாந்தமே காரணம். ஒரு மலரினைப் பார்க்கும்பொழுது மனம் எப்படி மகிழ்கின்றதோ... அதே போல்...!

ஜீவகாந்தம் அதிகத் திணிவிருந்தால் குழந்தையின் அந்த காந்த வசீகரம் கிட்டுமோ....? அப்படியெனில் யோகாவில் பெரிய பெரிய மகான்களிடம்கூட அந்த காந்த கவர்ச்சி இல்லையே...? அது ஏன்...? எண்ணங்களோ....? கள்ளங்கபடமில்லா எண்ணங்களோ..?

குழந்தைகளைப் பார்க்கும்பொழுதெல்லாம் மனம் சொல்லொணா ஒருவிதப் பரவச நிலையையடைகின்றதே அது ஏன்...? குழந்தை சிரிக்கும் சிரிப்பில் மனம் சொக்கி நம் கவலைகளெல்லாம் காணாமல் கரைந்து போகின்றதே அது ஏன்...?

'ம்ம்ம்மா....' என தன் பேச்சு வராத மழலை பாஷையில் என்னவோ சொல்கின்றதே...!

ஏன் உலகினில் எல்லா குழந்தைகளுமே 'ம்ம்ம்மா...' என்றே முதன் முதலில் குரல் கொடுக்கின்றதே அது எப்படி...? அனைவரையுமே நம்புகின்றதே...! அனைவரிடமும் கள்ளங்கபடம் பாராட்டது ஞானியைப் போல் எப்படி நட்பு கொள்ள முடிகின்றது....? கோபத்தில் அம்மா அடித்தாலும் மீண்டும் அம்மாவைச் சுற்றியே அன்பாய் வலம் வருகின்றதே… எவ்வித கோபமுமின்றி அது எப்படி…?

அழும் குழந்தையை அம்மா வாஞ்சையாய் முதுகில் தடவிட குழந்தை சிறிது நேரத்தில் இயல்பாகின்றதே அது எப்படி...? இவ்வளவு நியூட்டன் விசையில் இத்தனை வேகத்தில் இத்தனை பரப்பளவுள்ள ஒரு கை இத்தனை சதுர பரப்புள்ள குழந்தையின் முதுகில் இத்தனை நொடிகள் தடவினால் குழந்தை சமாதானமாகிவிடும் என்று நான் படித்த இயற்பியலில் நியூட்டனும், ஐன்ஸ்டினும் சொல்லித்தரவே இல்லையே...!

இங்கே என்ன நடக்கின்றது...? கண்களுக்குப் புலனாகா எதோ ஒரு சக்தி அம்மாவிடமிருந்து குழந்தைக்கு பரிமாற்றமடைகின்றதோ...? என்ன அது...? அன்புதானோ...? அன்பிற்கு அவ்வளவு வலிமையா....? அதனால்தான் அன்பே சிவம் என்கின்றனரோ...?

ஏன் அழும் குழந்தைகள் சிறிது நேரத்தில் தூங்கிவிடுகின்றனர்....? அழுகைக்கும் தூக்கத்திற்கும் தொடர்புண்டோ...? அவர்களின் இதயம் நொடிக்கு 148 தடவை அடிக்கின்றது....? தலையின் மையப் பகுதியில் துரியம் அவர்களுக்கு மட்டும் எப்படித் துடிக்கின்றது...? இதுதானே பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கின்றது. ..? Seed of souls ... அதனால்தானோ குழந்தைகள் கடவுளுக்குச் சமம் என்கின்றனரோ...?

குழந்தை தன் தேவைகளை வெளியுலகிற்கு அழுகையின் மூலம் வெளிப்படுத்துகின்றதே...அறிமுகமில்லா எந்தக் குழந்தை அழுதாலும் நம் மனம் பதைபதைக்கின்றதே அது ஏன்...? அது தன் மழலை பாஷையில் 'ங்கா...ங்கா...' என எதையோ சொல்லிச் சிரிக்கின்றதே... நமக்கு ஒன்றுமே புரியவில்லை.

எல்லாவற்றையுமே குழந்தை எப்படி ஆர்வமாய் புதுமையாய் பார்க்கின்றது....? உடனே அதனை ஆராய்ச்சி பண்ணும் வேலையில் இறங்கிவிடுகின்றதே...? குழந்தைகள் மிகப் பெரிய விஞ்ஞானிகளோ....? ஏன் எதற்கு எப்படி...? என சதா ஆராய்ந்து கொண்டேயிருக்கின்றதே...! இது பாம்பு இது நாய் என்ற பாகுபாடின்றி அனைத்து ஜீவராசிகளிடமும் சிரிக்கின்றதே...? அதேபோல் பாதுகாப்பின்மையும் பயத்தினையும் உணர்கின்றதே...? குழந்தையின் உற்சாகம் மகிழ்ச்சியளிப்பது ஏன்..?

குழந்தைகள் சிலரின் அருகாமையை விரும்புகின்றதே...! சிலரின் அருகாமையை வெறுக்கின்றதே...! எப்படி இதெல்லாம் சாத்தியம்...? நம் உணர்வுகளையும் எண்ண அதிர்வுகளையும் குழந்தைகள் உணர்கின்றனவோ....? அதனால் எளிதில் எப்படி உணர முடிகின்றது....? அங்கே மொழியில்லை; சைகை இல்லை...ஆனாலும் எப்படி குழந்தைகள் இவ்வளவு நுட்பமாக இருக்கின்றன...?


குழந்தையின் குதூகலமும் அதன் சேட்டைகளும் அனைவரும் விரும்பி ரசிக்கின்றனரே...அது ஏன்...? அதே குழந்தை கொஞ்சம் பெரியவனானால், 'எருமை...தண்டம்...சனியன்...' என ஏன் பெரியவர்கள் அர்ச்சிக்கின்றனரே....? என என் மனதினில் ஒழுங்கின்றி சிந்தனையோட்டங்கள் தாறுமாறாக எங்கெங்கோ சுழன்றன.

எனக்குப் பிடித்த வெண்ணிலா ஐஸ்க்ரீமை வாங்கிக்கொண்டு நகர்ந்தோம். கடல் பார்ப்பதற்கு எங்கள் ஊர் கண்மாயினை விட கொஞ்சம் பெரிதாகத் தென்பட்டது. இதனையா கடல் என்கின்றனர்...? என எனக்குள் வியப்பே மேலிட்டது.

தலைக்கு மேலே பெயர் தெரியா சில கடல் பறவைகள் வட்டமடித்தன. ஒரு கப்பல் டைட்டானிக்கினை இமிடேட் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தது. அருகேயிருக்கும் கனக்ட்டிகட் என்ற மாநிலத்திற்கு இந்தக் கப்பலில் பயணிக்கலாம். தினமும் இங்கிருந்து சிலர் அந்த மாநிலத்திற்கு வேலைக்குச் சென்று திரும்பிவருகின்றனர். காரினை கப்பலிலேயே கொண்டு செல்கின்றனர்.

சில கலாசாலை இளைஞிகளும் இளைஞர்களும் ஒரு படகினை தயார் செய்துகொண்டிருந்தனர். நடுத்தர வயதுள்ள ஒரு மாமி கடற்கரையிலிருந்த பாதுகாப்பு வளையத்தின் விளிம்பில் பதைபதைப்புடன் நின்றுகொண்டிருந்தார். அவர்கள் படகினைச் செலுத்தி கடலுக்குள் கண்ணின் பார்வையிலிருந்து காணாமல் போயினர். இந்த மாமி ஒவ்வொரு நொடியும் பதைபதைத்துக்கொண்டிருந்தார். பின்னர்தான் தெரிந்தது... அந்த இளைஞிகள் இவரது குழந்தைகள் என.

வேந்தன் அவர்கள் என்னைப் பலமுறை எழுதச் சொல்லிக் கேட்டுக்கொண்ட அந்த முத்த நிகழ்வுகளை இளைஞர்களும் சரி வயதான மூதாதையர்களும் சரி வஞ்சகமின்றி நிகழ்த்திக்கொண்டிருந்தனர். இந்த ஊர் கலாச்சாரத்தினைப் பற்றியும் இந்த ஊர் குழந்தைகளைப் பற்றியும் எங்கள் பேச்சுத் திரும்பியது.

எனக்குத் தமிழ் தவிர வேறு எந்த ஒரு மொழியும் சரியாகத் தெரியாததால் அந்த பங்களாதேஷி நண்பனும் நண்பியும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதினை மிகவும் புரிந்தது போல் தஞ்சாவூர் பொம்மை போல் 'யெஸ்....யெஸ்.... ஐ நோ...' எனத் தலையாட்டிக்கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் எனக்கும் கூட கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் புரிய ஆரம்பிக்கின்றது. வழக்கம்போல் ங்க்கு,ங்க் எனச் சேர்த்துக்கொண்டே சமாளித்துவிடுகின்றேன்.

இரவு எட்டரை மணியானாலும் இன்னும் சூரியன் தூங்கச் செல்லாமல் சுட்டெரித்துக்கொண்டுதானிருக்கின்றான்.

அவர்கள் தங்களது பங்களாதேஷ் நாட்டினைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தனர். அந்நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிக்கொண்டே வருவதாயும் முன்னேற்றப் பாதையில் சிறு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் இருப்பதாயும் மிகவும் வருந்தினர். இந்தியா நல்ல ஒரு முன்னேறிய நாடு என்றனர்.

என் முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவமாடியது.

No comments: